Published : 02 Apr 2023 07:26 AM
Last Updated : 02 Apr 2023 07:26 AM

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் ஸ்ரீநிவாச பெருமாள் தெப்ப உற்சவம் கோலாகலம்

மயிலாப்பூர் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் ஏரியில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதி கட்டப்பட்டு நூறாண்டு நெருங்கும் நிலையில், வரும் ஏப். 18-ம் தேதி நூற்றாண்டு விழா தொடங்க இருக்கிறது.

இதையொட்டி, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நேற்று முதல்முறையாக நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு பிறகு மயிலாப்பூரில் இருந்து மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு ஸ்ரீபாதம் பணியாளர்கள் ஸ்ரீநிவாச பெருமாளை தோளில் சுமந்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து, வேதபாராயண சபா உறுப்பினர்கள், வனபோஜன தர்மகர்த்தாக்கள் முன்னிலையில் மடிப்பாக்கம் ஒப்பிலியப்பன் ராமர் கோயிலில் காலை ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், மாலை 7 மணிக்கு மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

பக்தர்கள் சுவாமி தரிசனம்: தெப்பத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி பவனி வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கத்துடன் பெருமாளை வழிபட்டனர்.

தெப்ப உற்சவத்தை தொடர்ந்து, அன்று இரவு 10.30 மணிக்கு மேல் மடிப்பாக்கத்தில் இருந்து ஸ்ரீநிவாசப் பெருமாள் ஊர்வலமாகப் புறப்பட்டு இன்று அதிகாலை மயிலாப்பூர் கோயிலை வந்தடைந்தார். வரும் வழியெங்கும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x