Published : 02 Apr 2023 04:13 AM
Last Updated : 02 Apr 2023 04:13 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில், பங்குனிப் பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த வித விதமான பொம்மைகள் விற்பனை களைகட்டி வருகிறது.
கோடை வெயில் பாதிப்புகளைத் தடுக்க மஞ்சள் நீராடுதல், மஞ்சள் கிழங்கு வைத்து காப்புக் கட்டுதல், தொற்று நோய் பரவாமல் தடுக்க வீட்டில் வேப்பிலை வைத்தல் போன்ற சம்பிரதாயங்களுடன் அம்மன் கோயில்களில் விழாக்கள் நடைபெறும். விழாவின் போது, பக்தர்கள் அக்கினிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி, தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
மேலும், சிலர் உடல் நலம் பெற வேண்டியும், திருமணம், குழந்தைப்பேறு வேண்டியும், குடும்ப ஒற்றுமை, வேலை வேண்டி, புதிய வீடு கட்ட, வெளிநாட்டு வேலைக்குச் செல்ல பல்வேறு விதமான பொம்மைகளை வாங்கி வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இதற்கிடையே, விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா, கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று (ஏப்.2) பங்குனி பொங்கல் விழாவும், நாளை (3-ம் தேதி) கயிறுகுத்து மற்றும் அக்கினிச் சட்டி, 4-ம் தேதி தேரோட்டமும் 6-ம் தேதி மஞ்சள் நீராட்டல் மற்றும் கொடியிறக்குதல், 9-ம் தேதியுடன் திருவிழா நிறைவடைகிறது. அதையொட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் மண் பொம்மைகள் தயாரிக்கும் பணி விருதுநகர் மேலத்தெருவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இது குறித்து, மையிட்டான்பட்டி நாகராஜன் (55) கூறியதாவது: விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், திருத்தங்கல், இருக்கன்குடி, சங்கரன் கோயில், பன்னாரி மாரியம்மன் கோயில் போன்ற வெளிமாவட்டங்களில் உள்ள கோயில் பங்குனிப் பொங்கல் விழாவுக்காக பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் மண் பொம்மைகளை தயாரித்து வருகிறோம்.
இதற்காக தை, மாசி, பங்குனி மாதங்களில் விரதம் இருந்து இத்தொழிலை மேற்கொள்கிறோம். களிமண், செம்மண், கரிசல் மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்து இப்பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, சூளையில் வேக வைக்கப்பட்டு இங்கு கொண்டு வருகிறோம். பின்னர், பொம்மைகளுக்கு ஏற்ற வகையில் வண்ணம் தீட்டி மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கிறோம்.
ஆண்,பெண் உருவம், தொட்டில் குழந்தை, தாய் - சேய், திருமண பரிகாரத்துக்கு ஜோடி செட் பொம்மை, குடும்ப பொம்மை செட், கால் பாதம், கை, ஆயிரம் கண் பானை, அக்கினிச் சட்டி, வீடு பொம்மை, தவழும் குழந்தை, கார், விமான பொம்மை, கால்நடை பொம்மைகளை தயாரிக்கிறோம்.
இவற்றை ரூ.110 முதல் ரூ.400 வரை விலையில் விற்கிறோம். விலை கொடுத்து மண் வாங்குவதாலும், வண்ணங்களுக்கான மூலப் பொருள்கள் விலை உயர்வு காரணமாகவும் இந்த ஆண்டு ரூ.10 உயர்த்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT