Published : 01 Apr 2023 03:11 PM
Last Updated : 01 Apr 2023 03:11 PM

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்

திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் நிறைவாக ஆழித் தேரோட்டம் இன்று காலை 7.50 மணியளவில் நடைபெறுகிறது. தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள ஆழித் தேரானது வடம் பிடிக்கப்பட்டது.

இந்த பெரிய தேரினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் எஸ் பி சுரேஷ்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். முன்னதாக, காலை 5 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் திருத்தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஓடத் தொடங்கியது என வரலாறுகள் தெரிவிக்கின்றது. இந்தத் தேரின் மொத்த உயரம் 96 அடியாகவும், அகலம் 67 அடியாகவும் உள்ளது. இதன் மொத்த எடை 350 டன் ஆகும். இந்த தேரினை இழுப்பதற்கு ஒன்றரை டன் எடையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமுடைய வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. தேர் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தேரை திருப்புவதற்கும் தேரினை நிறுத்துவதற்கும் புளிய மரத்தால் ஆன 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றது.

இந்தத் தேரின் முகப்பு பகுதியில் ரிக் யஜுர் சாம அதர்வண என்கிற நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகள் பாயும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் நடுவில் யாழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரின் பின்பக்கத்தில் புல்ட்ரவுசர் இயந்திரம் மூலம் தேர் தள்ளப்படுகிறது. இந்த மிகப் பெரிய தேர் ஆடி அசைந்து வரும் காட்சியை பக்தர்கள் பக்தி பரவசத்தால் கண்டு களிக்கின்றனர். ஆரூரா தியாகேசா என்று விண்ணதிர முழக்கங்களை எழுப்பியபடி பக்தி பரவசத்தில் திளைத்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற இந்தத் தேர் திருவிழாவை காண்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிவ பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இந்த தேரோட்டம் திருவிழாவுக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x