Published : 30 Mar 2023 06:48 AM
Last Updated : 30 Mar 2023 06:48 AM
சென்னை: மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர்தேவஸ்தானத்தில் ‘இந்து குழுமம்’சார்பில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதி கட்டப்பட்டதன் 100-வதுஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்முறையாக வரும் ஏப்.1-ம் தேதி ஸ்ரீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம் உள்ளது. சுமார் 350 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், வேதாந்த தேசிகருடன்ஸ்ரீஹயக்ரீவரும் அருள்பாலித்து வந்தார். இந்த நிலையில், இக்கோயிலில் அனைத்து பக்தர்களும் வந்து வழிபடும் வகையில், ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் சன்னதி கட்ட திட்டமிடப்பட்டது.
திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாளை போலவே, ஸ்ரீனிவாசப் பெருமாளும், உடன் அலர்மேல்மங்கை தாயாரும் (ஸ்ரீபத்மாவதி தாயார்) 1924-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதி, ‘இந்து குழுமம்’ சார்பில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 10-ம்தேதி கட்டி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி உடன் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு 100 ஆண்டுகளாக அருள்பாலித்து வருகிறார்.
ராமர், லட்சுமி நரசிம்மர், ராமானுஜர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சாரியர்கள், கருடன், அனுமன் சன்னதிகளும் இக்கோயிலில் உள்ளன. ‘இந்து குழுமம்’ மற்றும் ‘டிவிஎஸ்’ குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் இக்கோயிலின் உற்சவ விழாக்களில் உபயதாரர்களாக இருந்து வருகின்றனர்.
ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதிகட்டப்பட்டு 100 ஆண்டுகளாக இதுவரை தெப்ப உற்சவம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முதல்முறையாக ஏப்.1-ம் தேதி மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ளஏரியில் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, மார்ச் 31-ம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) நள்ளிரவு 1 மணிக்கு பிறகு ஸ்ரீனிவாசப் பெருமாள் மடிப்பாக்கத்துக்கு உலா செல்கிறார்.
மயிலாப்பூரில் இருந்து மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு ஸ்ரீபாதம் பணியாளர்கள் சுவாமியை தோளில்சுமந்து ஊர்வலமாக செல்கின்றனர். வேதபாராயண சபா உறுப்பினர்கள், வனபோஜன தர்மகர்த்தாக்கள் முன்னிலையில் மடிப்பாக்கம் ஒப்பிலியப்பன் ராமர் கோயிலில் ஏப்.1-ம் தேதி சனிக்கிழமை காலை ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
அன்று மாலை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் நடைபெறும். தெப்பத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் எழுந்தருளி பவனி வருவார். தெப்ப உற்சவத்தை தொடர்ந்து, அன்று இரவு 10.30 மணி அளவில் மடிப்பாக்கத்தில் இருந்து ஸ்ரீனிவாசப் பெருமாள் ஊர்வலம் புறப்பட்டு மறுநாள் ஏப்.2-ம் தேதி ஞாயிறு அதிகாலை மயிலாப்பூர் கோயிலை வந்தடைவார்.
இதன்பிறகு, மயிலாப்பூரில் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில், ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதிகட்டப்பட்டதன் 100-வது ஆண்டு தொடக்க விழா ஏப்.18-ம் தேதி நடைபெறுகிறது. தொடக்க விழாவை, அஹோபில மடம் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைக்கிறார்.
நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 2024-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாதம்தோறும் கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள், இசை, நாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தெப்ப உற்சவம் குறித்து மேலும் அறிய 9445034576, 9841047064 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT