Published : 28 Mar 2023 04:52 PM
Last Updated : 28 Mar 2023 04:52 PM
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாக்களான மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயிலில் தொடங்கவுள்ளன. இதில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.23-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான மே 5-ம் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றதாகும். சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி (சித்திரை மாதம் 10-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. ஏப்.23-ல் காலை 10-30 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.
தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெறும். முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30-ல் நடைபெறும். மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான மே 2-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணிமுதல் 8.59 மணிக்குள் நடைபெறும்.
6 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதேபோல், ரூ.500 கட்டணச்சீட்டு 2500 பேர், ரூ.200 கட்டணச் சீட்டு 3500 பேர், அரசு ஊழியர்கள் 1000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். அடுத்த நாள் மே 3-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். பொதுமக்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் 20 இடங்களில் எல்இடி திரை மூலம் ஒளிபரப்பப்படவுள்ளன. மே 4-ம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.
அதேபோல், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர்கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகருக்கு மதுரை தல்லாகுளத்தில் மே 4-ம் தேதி எதிர்சேவை நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் மே 5-ம் தேதி சித்திரை மாத பவுர்ணமியன்று அதிகாலை 6 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை வரவேற்பர். திரளும் பக்தர்களுக்கேற்ற வசதிகள் செய்துதர மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பணிகள் நடந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT