Published : 28 Mar 2023 02:44 PM
Last Updated : 28 Mar 2023 02:44 PM

பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருக்கல்யாணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் கொடியேற்றம்

கோமளவள்ளித் தாயார்

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருக்கல்யாணத்தையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு இணையான 3-வது தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கோமளவல்லித் தாயார் பங்குனி உத்திர பிரம்மோற்சவமும், பெருமாள் - தாயார் திருக்கல்யாண மஹோத்சவமும் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, கொடி மரத்தின் முன் கோமளவல்லித் தாயார் சிறப்பலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கோயிலின் உள்ளே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றமும், இரவு தாயார் தங்க மங்களகிரியில் புறப்பாடு நடைபெற்றது.

வரும் ஏப்ரல் 4-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் கோமளவல்லித் தாயார் புறப்பாடும், பங்குனி உத்திர தினமான ஏப்ரல் 5-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் வெள்ளி ரதத்தில் உள்பிரகாரத் தேரோட்டமும், மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 7 மணிக்கு சித்திரைத் தேரோட்டத்தையொட்டி சித்திரைத் தேருக்குப் பந்தக்கால் முகூர்த்தமும், இரவு 8 மணிக்கு பெருமாள் பொற்றாமரை குளம் பிரதட்சணமும், சக்கரத்தாழ்வார், சக்கரவர்த்தி திருமகனுடன் எழுந்தருளி, கோமளவல்லித் தாயார் சன்னதிக்கு எதிரில் பெருமாள்-கோமளவல்லித் தாயார் மாலை மாற்றி திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது.

தொடர்ந்து ஏப்ரல் 12-ம் தேதி வரை பெருமாள் - கோமளவல்லித் தாயார், பல்வேறு அலங்காரத்தில் பொது மக்களுக்கு தரிசனம் தருகிறார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் ப.ராணி, செயல் அலுவலர் ச.சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x