Published : 26 Mar 2023 07:46 AM
Last Updated : 26 Mar 2023 07:46 AM

கொல்லங்கோடு கோயிலில் தமிழக, கேரள பக்தர்கள் பங்கேற்பு - 1,352 குழந்தைகளுக்கு விடிய விடிய தூக்க நேர்ச்சை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ர காளியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நேற்று நடந்தது. இரு வில்லில் 4 தூக்கக்காரர்கள் கையில் குழந்தைகளை ஏந்தி கோயிலை சுற்றி வலம் வந்தனர்.

நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று 1,352 குழந்தைகைளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் கேரள எல்லையில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் தூக்கத்திருவிழா நடைபெறும். நடப்பாண்டு திருவிழா கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

இக்கோயிலில் விரதம் இருந்து அம்மனின் அருளால் பிள்ளைப்பேறு அடைந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செலுத்துவது வேறு எங்கும் காணமுடியாத நிகழ்வாகும். இக்கோயிலில் தூக்க வில் என்ற வண்டி உள்ளது. இந்தவண்டியில் உயரமான இரு தடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இவ்விரு தடிகளின் உச்சியில் தலா இருவர் தொங்கிக் கொள்ளும் வகையில் குறுக்குச் சட்டங்கள் இருக்கும். இச்சட்டங்களில் நான்கு பேரை முதுகுடன் சேர்த்து கட்டி சுமார் 40 அடி உயரத்தில் தொங்க விட்டிருப்பார்கள். இவர்கள் நான்கு பேரும் தலா ஒரு குழந்தையை கையில் பிடித்துக் கொள்வார்கள். இவர்களைத் தாங்கிய வண்டியை பக்தர்கள் கோயிலைச் சுற்றி இழுத்து வருவர். ஒருமுறை இந்த வண்டி வலம் வந்ததும், அதிலுள்ள நான்கு பேரும் இறங்கிக் கொள்ள, வேறு நான்கு பேர், வேறு நான்கு குழந்தைகளுடன் தொங்கியபடி வலம் வருவார்கள்.

இவ்வாறு நேர்ச்சை செலுத்துவதற்காக நடப்பாண்டு 1,352 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர். குழந்தைகளின் பெற்றோரும், குழந்தைகளை ஏந்தியபடி தூக்க வில் வண்டியில் தொங்கியபடி வலம் வரும் தூக்கக்காரர்களும் கோயிலிலேயே தங்கி கடும் விரதம் இருந்தனர். தூக்க நேர்ச்சைக்காக பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. நேற்று முன்தினம் மாலை தூக்க வில் வண்டியின் வெள்ளோட்டம் நடைபெற்றது.

தூக்க நேர்ச்சை நாளான நேற்று அதிகாலையில் அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். உடனடியாக தூக்க நேர்ச்சை தொடங்கியது. முதலில் அம்மனுக்கான 4 தூக்க நேர்ச்சை நடைபெற்றது. அதன் பின்னர் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடந்தது. 1,352 குழந்தைகள் தலா 4 பேர் வீதம் கோயிலைச் சுற்றி வலம் வர வேண்டியது இருந்ததால், நேற்று அதிகாலை தொடங்கிய இந்நிகழ்ச்சி, நேற்று நள்ளிரவு முடிந்து விடிய விடிய நடந்தது.

குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x