Published : 14 Sep 2017 10:55 AM
Last Updated : 14 Sep 2017 10:55 AM
பாண்டவர் வம்சத்தில் வந்த பரீட்சித்து மகாராஜா சாபத்தால் பாம்பு கடித்து இறக்க, அவருடைய மகன் ஜெனமேஜயன் கால சர்ப்ப யாகம் ஒன்றைச் செய்து பூலோகத்தில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த யாகத்தீயில் பொசுங்கிப் போகும்படிச் செய்தார். நாகங்களுக்கெல்லாம் ராஜாவான கார்கோடகன் ஈசனை வழிபட்டு மீட்சியடைந்த ஆலயம் இது.
கார்கோடகனின் பக்தியை மெச்சிய ஈசன் அவனிடம், இத்தலத்துக்கு வந்து தொழுவோருக்குப் பாம்பு கடித்து மரணம் ஏற்படக் கூடாது என்று வாக்குறுதி வாங்கினார். சர்ப்ப தோஷம் அவர்களைத் தீண்டாதிருக்க வேண்டும் என்றும் எச்சரித்து, கார்கோடகனைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டார். அத்தினமே கடக ராசி, கடக லக்னத்தில் அமைந்த அற்புதமான தினமாகும். செளந்தரேஸ்வரர் என வழங்கப்பட்ட ஈசன் அத்தினம் முதல் கார்கோடேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
கையில் பூவுடன் சிலை
தன் கணவன் காமனை இழந்த ரதிதேவி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து தன் கணவனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்ட ரதிதேவிக்கு மாங்கல்யப் பிச்சை அளித்த தலமென்பதால் ‘ரதிவரம்’ என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரதியின் செப்புத் திருமேனி இத்தலத்தில் உள்ளது. இரண்டு கைகளை ஏந்தி, இறைவனிடத்தில் தன் கணவனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிட, இறைவன் மாங்கல்யப் பிச்சை அளித்தபோது அதைப் பெற்ற கோலத்தில் கையில் பூவுடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்கோடீஸ்வரம், ரதிவரம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது ‘காமரசவல்லி’ என அழைக்கப்படுகிறது. இந்த ஊரி்ல் ஒவ்வொருஆண்டும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இதில் இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை நட்டு வைப்பார்கள். இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு எட்டு நாட்களுக்குள் உயிர்ப்பித்து மீண்டும் தழைத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இன்றளவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
செளந்தரேஸ்வரர் கார்கோடகனுக்குத் தரிசனம் கொடுத்து கார்கோடகன் மற்றும் அவர் வம்சத்தை உயிர்ப்பித்த நாள் கடக ராசி, கடக லக்னம் என்பதால், இந்த ராசிக்காரர்கள் இந்த இறைவனை வழிபட அவர்களது கஷ்டங்கள், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவை விலகும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் உள்ள இறைவி பாலாம்பிகா ஈசனை வணங்கியபடி தெற்கு நோக்கி தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இத்தலம் திருவையாறில் உள்ள திருமானூர், ஏலக்குறிச்சிக்கு அருகில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT