Last Updated : 31 Jul, 2014 12:34 PM

 

Published : 31 Jul 2014 12:34 PM
Last Updated : 31 Jul 2014 12:34 PM

உவமைகள் வழியே பேசுவேன்

உலகம் முழுவதுமுள்ள விவிலிய ஆராய்ச்சியாளர்கள் ஒன்றைப் பொதுவாக ஏற்றுக்கொள்கிறார்கள். இறைமகன் இயேசு தெய்வீக நிலையில் நின்று செய்த அற்புதங்கள், அவர் செய்த போதனைகள் உள்ளிட்ட அவரது மனித வாழ்க்கை குறித்து, முதன்முதலில் ஒரு புத்தகமாகத் தொகுத்து எழுதியவர், அவரது முதன்மைச் சீடர்களில் ஒருவரான மத்தேயு என்பதுதான் அந்தப் பொதுமை.

இயேசு மரணத்தினின்று உயிர்த்தெழுந்து, அவர் வானுலகிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டு பிறகு சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகே ‘மத்தேயு சுவிஷேசம்’ எழுதப்பட்டது என்கிறார்கள்.

ஆனால் இயேசு தோன்றுவதற்கு 460 ஆண்டுகளுக்கு எழுதப்பட்டது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முக்கியப் பகுதியாக இருக்கும் சங்கீதப் புத்தகம். இயேசுவின் முன்னோரான தாவீது மற்றும் அவரது வழித்தோன்றல்களால் எழுதப்பட்ட புத்தகம் இது. இதுவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பரலோகத் தந்தையாகிய யெகோவா தேவனைத் துதித்துப் பாடி, நன்றி செலுத்தும் பாட்டுப் புத்தகம்தான் சங்கீதம். இது 150 பரிசுத்தப் பாடல்களின் தொகுப்பு.

எருசலேமிலிருந்த பரலோகத் தந்தையின் ஆலயத்தில் பாரம்பரியத் துதிப் பாடல்களாக இவை இசை வடிவம் பெற்றன. பரலோகத் தந்தையைத் துதிப்பதற்கான பாடல்கள் என்ற நிலையோடு சங்கீதம் நின்றுவிடாமல், தந்தையிடம் இறைஞ்சும் மன்றாட்டுகளும், நன்றிசெலுத்துதல்களும், களிகூருதல்களும் உள்ளன.

மிகமிக முக்கியமாகப் பரலோகத் தந்தையின் மகத்துவமான செயல்களையும் சித்தரிக்கும் இறை வரலாற்றின் ஆவணச் சுருக்கமாகவும் உள்ளன. அவ்வாறு இருப்பதால், பரலோகத்தந்தை, மனித குலத்துக்கு அருளப்போகும் கொடைகளையும், இறை இரக்கத்தையும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் சங்கீதத்தில் நேரடியாகவும் உள்ளுறையாகவும் பொதிந்துள்ளன.

சங்கீதத்தில் கூறப்பட்ட பல தீர்க்க தரிசனங்கள் காலத்தே நிறைவேறியிருக்கின்றன. அப்படிப்பட்ட தீர்க்கத் தரிசனங்களில் ஒன்றுதான் “உவமைகளாலேயே நான் பேசுவேன்”(சங்கீதம் 78:2) என்பது. சங்கீதத்தில் குறிப்பிட்டபடியே இயேசு போதிக்க ஆரம்பித்ததும் உவமைகளை மிகத் திறமையாக கைகொண்டு சீடத்துவ வாழ்முறையைச் சீடர்களுக்கும் மக்களுக்கும் புகட்டினார்.

உவமைகளைத் தேர்ந்து கொண்டது ஏன்?

கடவுளாகிய இயேசு ஏன் உவமைகளைக் கைகொண்டார் என்ற கேள்வி எழலாம். தாம் கற்பிக்கும் விஷயங்கள் மக்களின் மனதை விட்டு நீங்காமலிருக்க உவமைகள் பெருங்கருவி எனக் கருதினார். காரணம் வாழ்வுடன் தொடர்புடைய உவமைகளை மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள் என்று ஒரு ஆசிரியரின் ஸ்தானத்தில் நின்று அவர் உவமைகளை நம்பினார்.

காரணம் உவமைகள் காதுகளைக் கண்களாய் மாற்றுகின்றன, கேட்கும் விஷயங்களை மனதில் கற்பனை செய்து அவற்றைக் காட்சிகளாகப் பார்க்க உதவுகின்றன. நன்கு புரிந்துகொள்வதற்கு வார்த்தைகள் மனக் காட்சிகளாக மாறி நம் நினைவை விட்டு நீங்காத இடத்தை அவை எடுத்துக்கொள்கின்றன.

இயேசு கற்பித்த உவமைகள் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து, விவிலியத்தை வாசிக்கும் கிறிஸ்தவர்கள் அல்லாத மக்களிடமும் பசுமையாக நிலைத்திருப்பதற்கு உவமைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் இயேசு உருவகங்களையும் சரியான இடங்களில் பயன்படுத்தினார்.

உவமைகளையும் உருவகங்களையும் இயேசு பயன்படுத்தியதற்கு இரண்டு இறையியல் காரணங்களையும் விவிலியம் தருகிறது. முதல் காரணம், தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்கு. ‘கூட்டத்தாரிடம் இயேசு உவமைகளாலேயே பேசினார்.

சொல்லப்போனால், உவமைகள் இல்லாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை; “உவமைகளாலேயே நான் பேசுவேன்” என்று தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.’(மத்தேயு 13:34, 35) என்று மத்தேயு எழுதியிருக்கிறார்.

இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கு மேலும் பல காரணங்கள் இருந்தன. அவை மக்களுடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்பின; கூர்ந்து கேட்க அவர்களைத் தூண்டின. உவமைகளை மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது.

புகழ்பெற்ற உவமைகள்

இயேசு பயன்படுத்திய உவமைச் செல்வங்கள் அனைத்தையும் இங்கே ஒரே மூச்சில் பட்டியலிட முடியாது என்றாலும் சில புகழ்பெற்ற உவமைகளைக் காண்போம். “பறவைகள் விதைப்பதும் இல்லை அறுவடை செய்வதும் இல்லை, அதேபோல் காட்டுப் பூக்கள் நூற்பதும் இல்லை நெய்வதும் இல்லை. இருந்தாலும், கடவுள் அவற்றைக் கவனித்துக்கொள்கிறார்.” என்றார் இயேசு.

பறவைகளையும் பூக்களையுமே கடவுள் கவனித்துக்கொள்ளும்போது தனது அரசாங்கத்தை நாடும் மனித இனத்தை அவர் கவனிக்காமல் விட்டுவிடுவாரா என்பதுதான் இந்த உவமை காட்டும் உண்மை.

சீடர்களைப் பார்த்து இயேசு பயன்படுத்திய உருவகத்தைப் பாருங்கள். “நீங்கள் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறீர்கள்” என்றார். சொல்லிலும் செயலிலும் சத்தியம் எனும் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும் ஒருவரே உலகத்துக்கு ஒளியாக இருக்க முடியும் அல்லவா? அதைத்தான் இந்த உருவகம் மூலம் ஒன்றை வேறொன்றாகப் பொருத்திக் காட்டினார்.

தம்மை ‘நல்ல மேய்ப்பர்’ என்றும் தம் சீடர்களை ‘ஆடுகள்’ என்றும் இயேசு குறிப்பிட்டது மிகவும் புகழ்பெற்ற உவமையாக இருக்கிறது. மேய்ப்பருக்கும் ஆடுகளுக்கும் இடையே உள்ள, பந்தம் நெருக்கமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இயேசு அறிந்திருந்தார். மேய்ப்பனையே நம்பியிருக்கும் ஆடுகள் அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் அழைத்துச் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்கின்றன என்பதை இயேசு கவனித்திருந்தார்.

ஆடுகள் ஏன் மேய்ப்பனை பின்தொடர்கின்றன? ஏனென்றால், ‘ஆடுகள் அவருடைய குரலைத் தெரிந்து வைத்திருக்கின்றன’ என்று இயேசு சொன்னார். (யோவான் 10:2-4, 11). மேய்ப்பனின் காட்டிய இடத்தில், அவன் அழைத்துச் செல்லும் இடத்தில் மேய்ந்துவிட்டு, வயிறு நிறைந்ததும், பொழுது சாய்ந்த கையோடு மேய்ப்பனைப் பார்த்து வீட்டுக்குத் திரும்பலாம் என்று ஆடுகள் குரல் கொடுக்கின்றன.

மேய்ப்பனின் குரலுக்கும் செவிசாய்த்து, நரிகளிடமும், கழுதைப் புலிகளிடமும் சிக்கிக் கொள்ளாமல் வீட்டுக்குப் பாதுகாப்பாக வந்து சேர்கின்றன.

நீங்கள் கடவுளின் குரலுக்குச் செவிசாய்க்காத வழி தவறிய ஆட்டுக்குட்டியா என்பதை நினைத்துப் பார்க்க இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x