Published : 11 Mar 2023 07:45 AM
Last Updated : 11 Mar 2023 07:45 AM
சென்னை: வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் மூன்றாம் திருவந்தாதி காலக்ஷேபம் சாற்றுமுறை மற்றும் நாலாயிர திவ்யபிரபந்த காலக்ஷேபங்களின் நிறைவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இன்று (மார்ச் 11) மாலை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வேளுக்குடி சுவாமியின் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட்டத்தின் தொடக்க விழா நடைபெறவுள்ளது.
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி, பன்னிரு ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களையும் அதன் உள்ளுரை பொருள்களையும் சொற்பொழிவு செய்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்களிடையே பிரபலமான அறிஞர். கடந்த பல வருடங்களாக இவர் நடத்தி வந்த ஆழ்வார்களின் திவ்ய பிரபந்த தொடர் சொற்பொழிவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (மார்ச் 11) மாலை 5-30 மணி அளவில் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோயிலில் பழமை மாறாமல் முன்னோரின் உரைப்படி நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கிருஷ்ணன் சுவாமியின் மூன்றாம் திருவந்தாதி காலக்ஷேபம் சாற்றுமுறையும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் சஷ்டியப்தபூர்த்தி (60-வது பிறந்தநாள்) கொண்டாட்டத்தின் தொடக்க விழா நடைபெறும். இதில் முனைவர் உ.வே.எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் சுவாமி, உ.வே.கே.பி. தேவராஜன் சுவாமி பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
அத்தங்கி உ.வே.நிவாஸாசார்ய சுவாமி, வேளுக்குடி சுவாமியின் சொற்பொழிவு தொடர்பான தன்னுடைய அனுபவ உரையை வழங்க உள்ளார். இதைத் தொடர்ந்து, நாலாயிர திவ்ய பிரபந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாலை 4 மணி முதல் காலக்ஷேப நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று கிஞ்சித்காரம் டிரஸ்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT