Published : 06 Mar 2023 05:14 PM
Last Updated : 06 Mar 2023 05:14 PM

சோழர் கால பழமையான மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலில் மாதிரி கும்பாபிஷேகம் நடந்த முடிவு

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடியிலுள்ள சௌந்தரநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோயிலில் மாதிரி கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்படும் என ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தினர் முடிவு செய்துள்ளனர். சோழர் காலத்து பழமையான இக்கோயிலில் ராஜேந்திர சோழனின் புடைப்புச் சிற்பமும், தமிழ்க்கூத்து என்கிற பழமையான கூத்துக் கலைக்குக் கல்வெட்டு ஆதாரமாக இங்கு திகழ்கிறது. இக்கோயில் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலின் உப கோயில்களாக உள்ளது.

"இக்கோயிலில் திருப்பணி மேற்கொள்ள அறநிலையத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்து, சிதிலமடைந்திருந்த பழைய கோயிலைத் தரைமட்டமாக பிரித்து எடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கோயில் திருப்பணி செய்யப்படாமல் புதர்மண்டி மிகவும் பரிதாப நிலையில் உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இக்கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்படும் என்ற நிலை வந்தபோது, அனைவரும் ஒன்றிணைந்து அதனை நிறுத்தியதால், இக்கோயில் பிரபலமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இக்கோயிலில் திருப்பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து அதிகாரிகள், பல்வேறு வகையான போராட்டங்களை முன் நிறுத்தியும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளனர். அறநிலையத் துறை மற்றும் தமிழக தொல்லியல் துறை ஆகிய 2 துறைகள் இருந்தும், முக்கியத்துவம் வாய்ந்த கோயிலின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனையான விஷயமாகும்.

எனவே, இக்கோயிலில் திருப்பணிகளை நிறைவு செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வில்லை என்றால், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பில் பக்தர்களை ஒருங்கிணைத்து கோயிலின் முன்பு மிகப்பெரிய அளவில் மாதிரி கும்பாபிஷேகம் நடத்தும் போராட்டம் மேற்கொள்ளப்படும்" எனத் திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x