Published : 06 Mar 2023 06:56 AM
Last Updated : 06 Mar 2023 06:56 AM

மாசிமக விழாவையொட்டி கும்பகோணத்தில் 4 கோயில்களில் தேரோட்டம்: மகாமக குளத்தில் இன்று 12 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி

மாசி மக விழாவையொட்டி, கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற அபிமுகேஸ்வரர் கோயில் தேரோட்டம்.

கும்பகோணம்: மாசிமக விழாவையொட்டி, கும்பகோணத்தில் நேற்று 4 கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. இன்று (மார்ச் 6) மகாமக குளத்தில் 12 சிவன் கோயில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டு மாசிமக விழா 6 சிவன் கோயில்களில் பிப்.25-ம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் பிப்.26-ம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை விநாயகர், முருகன், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய 4 தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்வான மாசிமக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் இன்று (மார்ச் 6) நடைபெறுகிறது. இதையொட்டி, விழாவில் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் இருந்து காலை 10 மணிக்கு சுவாமிகள் புறப்பட்டு, மகாமக குளத்தைச் சுற்றி வலம் வந்து குளக் கரையில் தீர்த்தவாரிக்காக எழுந்தருள்வர்.

பெருமாள் கோயில் தேரோட்டம்: தொடர்ந்து, பகல் 12 மணிக்குமேல் பிற்பகல் 12.45 மணிக்குள்,குளத்தில் அஸ்திர தேவருக்குஅபிஷேகம், தீர்த்தவாரி நடைபெறும்.

மேலும், இன்று (மார்ச் 6) காலை 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களின் தேரோட்டம் நடைபெற உள்ளது. இன்று இரவு சாரங்கபாணி கோயில் பொற்றாமரைக் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x