Published : 21 Sep 2017 10:44 AM
Last Updated : 21 Sep 2017 10:44 AM
மதத்தின் அடிப்படை, கடவுளின் முன் அடிபணிவதின் மூலம் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைத்துயிரையும் நேசிக்கவைப்பதே. மதங்கள் அதிகமாக இருப்பதால், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று பெருமையாகச் சொன்னோம். ஆனால் இப்பொழுது அந்த ஒன்று எது என்பதுதான் பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாகவிட்டது. அன்பைப் போதிக்கும் மதத்தின் பெயரால் ஏன் இப்படி வெறுப்பை உமிழ்கிறோம்? புரிதல் இல்லை என்பதே காரணம். இன்றைய உலகின் இன்றியமையாத தேவை அன்பு. அந்த அன்பை வாரிவழங்கும் அட்சயபாத்திரங்களில் ஒன்று சூபியிசம்.
இந்து மதத்தில் கடவுளையடைய பக்தியோகம், ராஜயோகம், கர்மயோகம், ஞானயோகம் என்று நான்கு வகை வழிமுறைகள் உண்டு. இதில் பக்தியோகம், என்பது அறிவை ஒதுக்கி வைத்துவிட்டு, எந்தக் கேள்வியுமின்றி, முழுமையான நம்பிக்கையுடன் கடவுளின் முன் சரணடைவது. கண்ணனின் மீதான ராதையின் காதல் இதற்கு ஆகச் சிறந்த உதாரணம். இஸ்லாம் மார்க்கத்தின் ஒரு வழிமுறையான, சூபியிசத்தை, இந்த பக்தியோகத்துடன் ஒப்பிடலாம்.
கடவுள் மீதான நேசம்
கடவுளின் உண்மையான பண்பு அன்பு மட்டும்தான். அந்த அன்பை அவன் மேல் கொள்ளும் காதல் மூலம் அடைவதே சூபியிசம். இந்த முறை அறிவு சார்ந்ததோ, தர்க்கம் சார்ந்ததோ அல்லது சமூக நெறிமுறைகளைச் சார்ந்ததோ கிடையாது. இது முழுக்கமுழுக்க அன்பும் காதலும் மட்டும் சார்ந்தது. சரி எது? தவறு எது? என்று ஆராயாமல், அன்பை மட்டும் வெளிப்படுத்துவதுதான் இதன் அடிப்படை நோக்கம்.
உண்மையை விளக்குவது எப்பொழுதும் ஒரு கடினமான வேலைதான். அதுவும் எல்லையற்ற, அளவற்ற, அனைத்துமான கடவுளை பற்றி விளக்குவதற்கு போதுமான வார்த்தைகள் ஒருபொழுதும் இருக்கப்போவதில்லை. இது குறையுள்ள மனிதர்களுக்கு, எப்பொழுதும் சந்தேகத்தையும், தவறான புரிதலையும் அளிக்கும். இருந்தாலும் சூபி முறையில் சொல்வதானால்,
“ஒருவனால் கடல் முழுவதையும் குடிக்க முடியவில்லை என்றாலும்,
அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிப்பான்”
தத்துவஞானிகள், இந்தப் பேருண்மையைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதிஇருக்கிறார்கள், தொண்டை கிழிய பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர்களது அந்த முயற்சி ஒருபொழுதும் போதுமானதாக இருந்ததில்லை.
யானையின் ஒரு பகுதி தான்
மிகப்பெரிய சூபி ஞானியான ரூமியின், யானைக்கதை பற்றி சொல்வது இங்கு பொருத்தமாக இருக்கும். யானையை முன்பின் பார்த்திராத ஒரு ஆண்கள் குழு, ஒரு நள்ளிரவில் யானையை சந்திக்க நேரிட்டது. வெளிச்சம் என்பது சிறிதும் இல்லை. அனைவரும் யானையை தடவிப்பார்ப்பதன் மூலம் அறிய முற்பட்டனர். பின்பு வீடு திரும்பியபின் யானையை பற்றி மற்றவர்களுக்கு வர்ணித்தனர்.
காலை தொட்டவன், யானை ஒரு தூண் போன்றிருந்தது என்றான், காதை தொட்டவன் அது ஒரு விசிறி போன்ற விலங்கு எனறான், இதைப் போன்று ஆளாளுக்கு அவர்கள் அறிந்ததைக் கொண்டு வர்ணித்தனர். இவர்கள் வர்ணித்தது எல்லாம் யானையின் ஒரு பகுதிதான், இருப்பினும் யானையின் முழுமையான வடிவத்தை யாராலும் வர்ணிக்கமுடியவில்லை. அவர்களிடம் ஒரு மெழுகுவர்த்தி இருந்திருக்குமேயானால், அவர்களால் யானையின் முழு வடிவத்தையும் அறிந்திருக்கமுடியும்.
அதைப் போன்றுதான், இந்த பேருண்மையை பற்றி அறிவதற்கு, நமது அறிவு ஒருபொழுதும் போதாது. அதை நாம் ஆன்மிக வெளிச்சம் கொண்டுதான் அதை அறிந்து, அதில் கரையமுடியும். தன்னையறிவதுதான் இந்த ஆன்மிக வழியின் அடிப்படை நோக்கம். ஏனென்றால் இந்த ‘நான்’ என்பதில் எல்லாமும் அடங்கியுள்ளது. தன்னையறிந்தவன், தன்னையிழந்து, எல்லாமுமான உண்மையில் ஐக்கியமாகிறான். எல்லாமுமான உண்மை என்பது சமுத்திரமென்றால், நாம் வெறும் துளியாவோம். துளியின் விழி கொண்டு கடலை பார்க்கமுடியாது. ஆனால், துளி சமுத்திரத்தில் கலந்த பின், சமுத்திரத்தின் விழி கொண்டு அதனைக் காணலாம்.
துளியான நாம், பேருண்மையான சமுத்திரத்தில் அன்பின் வெளிச்சம் கொண்டு கலப்பது எப்படி?
கட்டுரையாளர், தொடர்புக்கு: mhushain@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT