Published : 05 Mar 2023 05:42 PM
Last Updated : 05 Mar 2023 05:42 PM

கேரள அம்மன் கோயிலில் நாளை மாசி மக திருவிழா - மூன்று டன் மாலைகளை அனுப்பிய தமிழக பக்தர்

சோட்டணிக்கரை அம்மன் கோயில் விழாவிற்கு கொண்டுசெல்ல நிலக்கோட்டையில் பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்

திண்டுக்கல்: கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் நாளை (திங்கள்கிழமை) நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு, நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

கேரள மாநிலம் சோட்டானிக்கரையில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்த நாளாக கருதப்படும் மாசி மக திருநாள் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு ஆலயத்தை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுகந்தா கரிகால பாண்டியன் என்ற பக்தர் மூன்று டன் வண்ண மலர்களை மாலையாக தொடுத்து அதனை சோட்டானிக்கரை கோயிலுக்கு காணிக்கையாக அனுப்பி வைத்தார்.

ஆண்டுதோறும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலுக்கு மாசி மகத்தையொட்டி மலர்களை அனுப்பும் பணியில் சுகந்தா கரிகால பாண்டியன் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இன்று (மார்ச் 5) நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் விரைவில் வாடாத செவ்வந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் மொத்தம் மூன்று டன் பூக்களை வாங்கினார். அதை மாலையாக தொடுக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை ஈடுபடச்செய்தார். இரவு வரை பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.

பின்னர் அனைத்து மாலைகளையும் கேரள மாநிலம் சோட்டானிக்கரையில் பகவதி அம்மன் கோயிலுக்கு வாகனத்தில் எடுத்துச்சென்றார். மாசி மக விழாவில் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் முழுவதும், நிலக்கோட்டையில் இருந்து செல்லும் பூக்களால் அலங்கரிக்கப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x