Published : 07 Sep 2017 11:38 AM
Last Updated : 07 Sep 2017 11:38 AM

பாவங்கள் போக்கும் புஷ்கர நீராடல்

மிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலத்தில் பூமியைச் செழிக்கச் செய்யத் தவழ்ந்துவரும் காவிரியை மக்கள் தாயாக நினைத்து வழிபடுவார்கள். அங்கே மகாநதியாகப் போற்றப்பட்டு துலாக்காவிரி கட்டம் என்ற பெருமையையும் பெற்று ஜீவநதியாகவும் திகழ்கிறது காவிரி.

வரும் செப்டம்பர் 12 முதல் 24-ம் தேதிவரை இந்தத் தெய்வ நதிக்கு மாபெரும் புஷ்கர திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

புஷ்கரம் என்பது குருபகவான் ஒவ்வோர் ஆண்டும் ஒரு ராசியிலிருந்து வேறொரு ராசிக்கு இடம் மாறும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுகிற விழா. மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்ம தேவனின் கமண்டலத்தில் வாசம் செய்யும் புஷ்கரமானவர், குருப்பெயர்ச்சி நடக்கும் காலகட்டத்தில் 12 தினங்கள் வாசம் செய்யவதாக வரலாறு. நம் நாட்டில் ஏராளமான நதிகள் இருந்தாலும் 12 ராசிகளைப் பெற்ற கங்கை முதலிய முக்கிய நதிகளுக்கு மட்டுமே புஷ்கர விழா எடுக்கும் தெய்வீகத்தன்மை உண்டு.

காவிரி நதியின் ராசி துலாம் ஆக இருப்பதாலும் 144 ஆண்டுகளுக்குப் பிறகு வருவதாலும் இந்த புஷ்கரவிழா மகத்துவம் வாய்ந்தது. முன்பு 1860-ம் ஆண்டில் மாயூரம் காவிரியில் புஷ்கரவிழா நடந்துள்ளது. பிரம்மன் மற்றும் அஷ்ட லட்சுமிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இப்புனித நீராடல் நற்பெயரும் திருமகள் அருள் பார்வையும் தரும் என்பது ஐதீகம்.

துலாக்காவிரி மகாத்மியம்

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பர். புஷ்கரம் நடக்கிற புண்ணிய காலத்தில் சிவன் , விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், மகரிஷிகள், சப்தகன்னிகள் வாசம் செய்வதால் அங்கே புனித நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனும், ஆடைதானம், அன்னதானம் சிவயாகம் செய்த பலனும் கிடைக்கும். மேலும் இக்காலகட்டத்தில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து திதி செய்வதால் குடும்பத்தில் பிதுர் தோஷங்கள் விலகி சௌபாக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.

காவிரியின் மகிமை

கவேரரின் மகளாக வந்ததாலும் காகம் வடிவத்தில் வந்த கணேசரின் செயலால் வழிந்தோடியதாலும் காவிரி என்ற பெயர் பெற்றாள் இந்த மகாநதி. காவிரியில் புனித நீராடிவிட்டால் நமது ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்களை உடனே அகன்றுவிடும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஒரு சமயம் கன்வ மகரிஷியைக் கருமை நிறமுடைய மூன்று பெண்கள் சந்தித்தார்கள். “நாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள். மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களை எங்களிடம் வந்து கரைத்துவிட்டுச் செல்வதால் கருமை நிறமடைந்துவிட்டோம். இதற்குத் தீர்வு என்ன?” என்று கேட்டனர். “தென் மண்டலத்தில் மாயூரம் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால் நலம் பெறுவீர்கள்” என்று கன்வ மகரிஷி ஆசி கூறி அனுப்பினார்.

மாயூரத்தில் ரிஷப தீர்த்தம்

தனது தர்மபத்தினியான பார்வதியைக் காண சிவன் வந்தபோது அவரைச் சுமந்து வந்த ரிஷபம், தன்னால்தான் சிவனால் வேகமாக மாயூரம் வந்தடைய முடிந்தது என ஆணவன் கொண்டது. அதன் ஆணவத்தைத் தன் ஞானக் குறிப்பால் உணர்ந்த சிவன், தன் கேசத்தில் இருந்து ஒரு முடியை எடுத்து அதன் முதுகில் வைத்து அழுத்தினார். பாரம் தாங்க முடியாமல் கீழே விழுந்த ரிஷபம் தன் செயலை உணர்ந்து, சிவனிடம் மண்டியிட்டு விமோசனம் கேட்டது. தென்மண்டல பூமியில் மாயூர காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசியில் தினமும் புனித நீராடி சிவலிங்கம் செய்து வில்வதனங்களால் அர்ச்சனை செய்து தன்னைத் துதித்துவந்தால், குருவடிவாக அமர்ந்துள்ள தலத்தில் தவம்புரிந்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். ரிஷபமும் அவ்வாறே செய்து தன்னுடைய பாவங்களைப் போக்கி அவருடன் சேர்ந்துக்கொண்டது. ரிஷபம் பூஜை செய்த சிவன் ஆலயம் இன்று வள்ளலார் கோயில் என்று புகழ்பெற்று விளங்குகிறது. துலாக்கட்டத்திற்கு ரிஷப தீர்த்தம் என்று தன் பெயரையும் நிலைபடச் செய்துகொண்டது.

புஷ்கர விழா கோலாகலம்

குருவின் துலாம் ராசிப் பிரவேசத்தால் காவிரிக்கு மகா புஷ்கர விழா நடைபெறும் தருணத்தில் 12 ராசியினரும் இத்தலத்துத் துலாக்கட்டத்தில் பரிகார வழிபாடுகள் செய்து பலன் பெறலாம். குறிப்பாகக் கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்கள் அவசியம் செய்ய வேண்டும். மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது நலம் தரும். வரும் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் புஷ்கர விழா தொடங்குகிறது.

துலாக்கட்டத்தில் புஷ்கர நீராடுதல் விதி

மகிமைகள் நிறைந்திருக்கும் மாயூரம் என்னும் மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள கோயில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு துலாக்கட்டத்தில் தீர்த்தம் அருள்வார்கள். குறிப்பாக ஸ்ரீ அபயாம்பிகா உடனுறையும் மயூரநாத ஈஸ்வரனும், ஞானாம்பிகா உடனுறையும் ஸ்ரீ வதான்யேஸ்வரரும் பஞ்சமூர்த்திகள் சகிதமாக அஸ்திரதேவருடன் தீர்த்தம் அருள்வார்கள். அந்த நேரத்தில் துலாக்கட்டம் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடுதல் வேண்டும். தொடர்ந்து நீங்கள் எந்த நாளில் நீராடினாலும் முழுப்பலனும் கிடைக்கும். நீராடிய பிறகு மகாசங்கல்பம் செய்து வேத பண்டிதர்கள், சிவாச்சார்யர் பட்டர்களுக்கு ஆடைதானம் தாம்பூலத்தில் அளித்து ஏழைகளுக்கு தம்மால் இயன்ற தானங்களைச் செய்ய வேண்டும்.

தீர்த்தக் கட்டத்தில் வழிபாடுகள் முடிந்ததும் மயிலாடுதுறை ஈஸ்வரனான மயூரநாதசுவாமியையும் தேவிஸ்ரீ அபாயம்பிகையையும் தரிசித்து, வழிகாட்டும் வள்ளல் பெருமானாகிய வதான்யேஸ்வரரையும் அங்குள்ள ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தியையும் வழிபட வேண்டும்.

அங்கிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருஇந்தளூர் என்னும் திவ்யதேசத்தில் ஸ்ரீ பரிமள ரங்கநாதப் பெருமாளையும் சேவிக்க வேண்டும். புஷ்கர காலத்தில் நீராட முடியாதவர்கள் நவம்பர் 16-ல் கடைமுகம் சென்று தரிசித்து வரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x