Published : 28 Feb 2023 03:15 PM
Last Updated : 28 Feb 2023 03:15 PM

கும்பகோணம் | ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்

ஊர்வலம் வரும் நாயன்மார்கள்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களின் இரட்டை வீதியுலா நடைபெற்றது.

மாசிமக விழாவுக்கான இக்கோயிலில் கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்று காலை வெள்ளிப் பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

பின்னர் கோயிலில் அப்பர், சுந்தரர், மாணி்க்கவாசகர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுது. அலங்கரிக்கப்பட்ட படிச்சட்டங்களில் 63 நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர் கோயில் வீதிகளில் உலாவந்தது.

அப்போது கோயில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்ட தலைவர் நடராஜன் தலைமையில் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். தொடர்ந்து 63 நாயன்மார்களும், அதன்பின்னர் சுவாமி - அம்பாளும் மங்கள இசைவாத்தியத்தோடு வீதியுலா நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு தன்னைத்தானே பூஜித்தலும், இரவு 8 மணிக்கு ஒலைச்சப்பரம் வீதியுலா இன்று இரவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் திருத்தேரோட்டமும், 6-ம் தேதி மகா மககுளத்தில் 12 சிவன் கோயில்களின் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x