Published : 28 Sep 2017 12:06 PM
Last Updated : 28 Sep 2017 12:06 PM
இந்தியாவின் பெருமைகளை வெளிநாடுகளில் பரவச் செய்த வரலாற்று நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது, சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!
சிகாகோவில் இந்து சமயப் பெருமைகளை சுவாமி விவேகானந்தர் எடுத்துக்கூறுவதற்கு முன்னர்வரை, இந்தியாவை சாதுக்களும் சர்ப்பங்களும் குரங்காட்டிகளும் நிறைந்த நாடு என்பதாக மட்டுமே வெளிநாட்டினர் கற்பனை செய்துவைத்திருந்தனர்.
‘இந்த உலகின் அறிவியல் உண்மைகள் எல்லாம் இருளில் கிடந்தன. கடவுள் நியூட்டனைப் படைத்தார். எல்லாம் வெளிச்சமானது’ என்று சொல்வார்கள். சுவாமி விவேகானந்தரின் வருகைக்குப் பிறகே, அதுவரையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்த இந்து மதமும், இந்தியாவின் நெடிய ஆன்மிக மரபும் மேற்கில் உள்ளவர்களுக்குத் துலக்கமாயிற்று.
சேதி சொல்லும் தேதி
1893-ம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில், ‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!’ என்று விளித்துத் தன் பேச்சைத் தொடங்கினார் விவேகானந்தர். அப்போது அவருக்கு வயது 30!
அமெரிக்காவுக்கு 9/11 என்கிற தேதி மறக்க முடியாத நாள். பிற்காலத்தில் அந்த நாட்டின் இரட்டைக் கோபுரம், தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதே தேதியில், இன்னொரு குண்டு வெடித்தது. அது, அமெரிக்கர்களை மனங்களை விசாலப்படுத்தியது; இந்தியா தொடர்பான அவர்களின் பார்வையைச் சரி செய்தது.
அந்த நாளில்தான், தங்களை அந்த மாநாட்டுக்கு வரவேற்றமைக்கு மறுமொழி கூறும்விதமாக சுவாமி விவேகானந்தர் பேசினார். எடுத்தவுடனே ‘அமெரிக்க சகோதரிகளே’ என்று அழைத்து, பெண்களை முன்னிலைப்படுத்தினார் அவர். அவருக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் ‘கணவான்களே… சீமாட்டிகளே..’ என்று விளித்து பேச்சைத் தொடங்க, விவேகானந்தரோ ‘சகோதரிகளே, சகோதரர்களே’ என்று தன் உரையைத் தொடங்கினார். அந்த உரை, அங்கு கூடியிருந்த மக்களை விழித்தெழச் செய்தது.
புகலிடம் தந்த நாடு
“பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்துக்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம்” என்று சொன்ன விவேகானந்தர், அதற்குப் பிறகுதான் முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்தார்.
“உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவுக்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த இஸ்ரேலியர்களை மனமாரத் தழுவித்கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். பெருமைமிக்க ஸொராஷ்ட்ரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன்” என்று இந்து மதத்தின் முக்கிய அம்சமான நெகிழ்வுத்தன்மையை, தகுந்த உதாரணங்களுடன் எடுத்துக் கூறினார்.
விவேகானந்தரின் அந்தச் சொற்கள், பிற்காலத்தில் பல நாடுகளிலும் எதிரொலித்திருக்கின்றன. ஆனால் தியான்மென்னில் நடக்கும் யுத்தத்தால் வீடிழந்து, நாடிழந்து, சொந்தங்களையெல்லாம் இழந்து ஓடிவரும் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களுக்கு இந்தியா அடைக்கலம் தர மறுக்கிறது.
கேட்கிறதா மணி ஓசை?
“பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்தப் பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!” என்று விவேகானந்தர் அன்று பேசிய வார்த்தைகள் எத்தனை அர்த்தம் பொதிந்தவை.
இப்படிச் சொன்ன விவேகானந்தர் தனது சொற்பொழிவை ஒரு எச்சரிக்கையுடன் முடிக்கிறார்: “இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடையப் பல்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்”.
அந்த மணியோசை நம் காதுகளுக்கு இப்போதும் கேட்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT