Published : 26 Feb 2023 04:00 AM
Last Updated : 26 Feb 2023 04:00 AM
திருவள்ளூர் / காஞ்சி / திருப்போரூர்: திருத்தணி முருகன் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் மற்றும் திருப்போரூர் கந்த சுவாமி கோயில்களில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்த வகையில், இந்த ஆண்டின் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு விநாயகர் வீதியுலாவுடன் தொடங்கியது. நேற்று கொடியேற்றமும், இரவு கேடய உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (26-ம் தேதி) காலை 9:30 மணிக்கு வெள்ளி சூரியபிரபை, இரவு 7 மணிக்கு பூத வாகனம், நாளை (27-ம் தேதி) காலை 9:30 மணிக்கு சிம்ம வாகனம், இரவு 7 மணிக்கு ஆட்டுக்கிடா வாகன உற்சவம் நடைபெறும்.
வரும் 28-ம் தேதி காலை 9:30 மணிக்கு பல்லக்கு சேவையும், இரவு 7 மணிக்கு வெள்ளி நாக வாகனம், மார்ச் 1-ம் தேதி காலை 9:30 மணிக்கு அன்ன வாகனம், இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகன உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதி மாலை 4:30 மணிக்கு புலி வாகனம், இரவு 7 மணிக்கு யானை வாகனம், 3-ம் தேதி இரவு 7 மணிக்கு தேரோட்டம்,
4-ம் தேதி காலை 9:30 மணிக்கு யாளி வாகனம், மாலை 5 மணிக்கு பாரிவேட்டை, இரவு குதிரை வாகனம், வள்ளி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். மார்ச் 5-ம் தேதி காலை 6 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப் பொடி விழாவும், இரவு 8 மணிக்கு ஆறுமுக சுவாமி உற்சவமும் நடைபெறும்.
மார்ச் 6-ம் தேதி காலை 5 மணிக்கு தீர்த்தவாரி சண்முகசுவாமி உற்சவமும், மாலை 5 மணிக்கு உற்சவர் அபிேஷகமும், இரவு கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
காமாட்சி அம்மன் கோயில்: இதேபோல் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவமும் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் கோயில் ஸ்தானீகர்களால் அஸ்திர தேவர் வைக்கப்பட்டிருந்த சிறிய பல்லக்கு ஒன்றில் கொடி மற்றும் பட்டம் வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு தீபாராதனைகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இந்த கொடியேற்ற விழாவில் கோயில் காரியம் ந.சுந்தரேசு ஐயர், மணியக்காரர் சூரிய நாராயணன், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் உட்பட பலரும் பங்கேற்றனர். இந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கொடியேற்றத்தின் போது சென்னையைச் சேர்ந்த விஜய் மாதன் தலைமையில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சியும், திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளி முதல்வர் ஷியாமா கிருஷ்ணன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்போரூர் கோயில்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத கோயில் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.நேற்று இரவு 8 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் மாதம் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT