Published : 22 Feb 2023 06:56 PM
Last Updated : 22 Feb 2023 06:56 PM
ராமேசுவரம்: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு செல்லும் முதல் ஆன்மிக பயணக் குழு இன்று ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், “ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்கள் விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு 66 பேர் கொண்ட முதல் குழுவினர் புதன்கிழமை மாலை ராமேசுவரத்திலிருந்து ஒரு பேருந்து மற்றும் ஒரு வேனில் புறப்பட்டுச் சென்றனர். இந்த ஆன்மிகப் பயணத்தை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் துணை ஆணையர் மாரியப்பன் துவங்கி வைத்தார்.
இந்த ஆன்மிகப் பயணக் குழுவினர் விழுப்புரம் வரையிலும் பேருந்தில் சென்று, அங்கிருந்து வியாழக்கிழமை ரயில் மூலம் காசி செல்கின்றனர். தங்களின் பயணத்தை 28.02.2023 அன்று நிறைவு செய்கின்றனர்.
இரண்டாவது குழுவினர் 01.03.2023 அன்று பயணத்தை துவங்கி 07.02.2023 அன்று பயணத்தை நிறைவு செய்கின்றனர். மூன்றாவது குழுவினர் 08.03.2023 அன்று பயணத்தை துவங்கி 14.03.2023 அன்று பயணத்தை நிறைவு செய்வார்கள் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT