Published : 18 Feb 2023 04:33 AM
Last Updated : 18 Feb 2023 04:33 AM

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் ரத ஊர்வலம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ரத வீதிகளில் வலம் வந்த பூத்தேர். படம்: என்.தங்கரத்தினம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவின் தொடக்கமாக நேற்று பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. ரத வீதிகளில் பூத்தேர் பவனிவர வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை வழங்கி அம்மனை வழிபட்டனர்.

திண்டுக்கல் நகரின் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் பூ அலங்காரத்துடன் பல்வேறு கோலங்கள் இடப்பட்டு மாசித் திருவிழாவை பக்தர்கள் வரவேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ரதவீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி தொடங்கியது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களுடன் காத்திருந்து பூத்தேர் வந்தபோது, பூக்களை அம்மனுக்கு வழங்கி வழிபட்டனர்.

ரதவீதிகளில் பலரும் நீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த பூத்தேர், மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலை அடைந்தது.

நாளை (பிப்.19) சாட்டுதல் நிகழ்ச்சியும், பிப்.21 பகல் 12 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறும். முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மார்ச் 3-ம் தேதி காலையில் நடைபெறுகிறது. தினமும் நடைபெறும் மண்டகப்படிதாரர் நிகழ்ச்சியில் அம்மன் இரவில் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியதையடுத்து, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை செலுத்த தயாராகி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x