Published : 17 Feb 2023 04:25 AM
Last Updated : 17 Feb 2023 04:25 AM
கோவில்பட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த பன்னிரு சிவாலய ஓட்டம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இம்மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டே பன்னிரு சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினம் முஞ்சிறை மகாதேவர் கோயில் முன்பிருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை துவங்குவர். கையில் விசிறி, தோளில் விபூதியுடன் கூடிய கைப்பையுடன் காவி உடைதரித்து ‘கோவிந்தா... கோபாலா...’ என பக்திகோஷம் முழங்க பன்னிரு சிவாலயங்களையும் பக்தர்கள் ஓடியே சென்று வழிபடுவர்.
மொத்தம் 108 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த 12 கோயில்களுக்கும் 24 மணி நேரத்துக்குள் சென்று தரிசனம் செய்யும் வகையில் பக்தர்கள் நேர்த்திக் கடன் வழிபாடு மேற்கொள்வர். சிவாலய ஓட்டத்தில் ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள், பெண்கள் என பலதரப்பினரும் பங்கேற்பர்.
சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் மற்றும் பிற வாகனங்களில் சென்றும் பக்தர்கள் இந்த பன்னிரு சிவாலய புனித பயணத்தை மேற்கொள்கின்றனர். இன்று காலை முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் தொடங்குகின்றனர். தொடர்ந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிதாங்கோடு, திருவிடைகோடு, திருபன்னிகோடு, திருநட்டாலம் ஆகிய சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர்.
திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சிவாலய ஓட்டம் நிறைவடைகிறது. இந்த 12 திருத்தலங்களையும் ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும், சாலைகளை விரிவுபடுத்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், உலகில் வேறெங்கும் இல்லாத இந்த வழிபாட்டு முறையை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு: இந்நிலையில் பன்னிரு சிவாலய ஓட்டம் நடைபெறும் பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணி இரு நாட்களாக நடைபெற்றது. சிவாலய ஓட்டம் நடைபெறும் வழித்தடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் ஓடும் பக்தர்களுக்கு இளநீர், நுங்கு, மோர் உள்ளிட்ட குளிர் பானங்களை வழங்க பக்தர்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை: சிவாலய ஓட்டத்டதை முன்னிட்டு சிவராத்திரி தினமான நாளை (18-ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி குமரி மாவட்ட ஆட்சியர் தர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஈடாக மார்ச் 25-ம் தேதி (சனி) வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதர் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 4 மணியளவில் பூரண கும்ப ஜெபம் நடந்தது. பின்னர், அனைத்து சன்னதியிலும் காப்பு கட்டப்பட்டது.
இரவு 7.35 மணிக்கு மேல் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடந்தது. 2-ம் திருநாளான நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி சப்பரத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திரு வீதியுலா நடந்தது.
இன்று (17-ம் தேதி) இரவு 11 மணிக்கு இருளப்பசுவாமி முக கப்பரை திருவீதியுலாவும், நாளை (18-ம் தேதி) காலை 8 மணிக்கு மஞ்சள் பால்குடம் ஊர்வலமும், தொடர்ந்து 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT