Published : 04 Feb 2023 04:15 PM
Last Updated : 04 Feb 2023 04:15 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தை யொட்டி தீர்த்தவாரி இன்று (பிப்.4) நடைபெற்றது.
ஆறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான இக்கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு கடந்த 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று, தொடர்ந்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வசந்த மண்டபம் எழுந்தருளினர். 27-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும், 3-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத்தை யொட்டி இன்று காலை வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிகள் 4 வீதிகளில் வீதியுலா சென்று, காவிரி ஆற்றுக்கு வந்தது. அங்கு அஸ்ரத் தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களாக அபிஷேகம் நடைபெற்று, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
நாளை (5-ம் தேதி) சுவாமிகள் யதாஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT