Published : 29 Dec 2016 10:29 AM
Last Updated : 29 Dec 2016 10:29 AM
அனுமத் ஜெயந்தி: டிசம்பர் 29 |
ராம பக்திக்குப் பெயர் பெற்றவர் அனுமன். தான் இப்பூவுலகில் பிறந்ததே ராமனுக்குச் சேவை செய்யத்தான் என்ற எண்ணம் கொண்டவர். அதனால் ராமனை விட்டுச் சிறிதளவும் அனுமன் அகலாமல் இருப்பார். ராமனிடம் வந்து பேசவும் சந்திக்கவும் பிறருக்கு இந்த ஏற்பாடு இடைஞ்சலாக இருந்ததால், அவர்கள் ராமனிடம் புகார் அளித்தனர்.
இதனை உணர்ந்த ராமனும், அனைவரையும் அழைத்து ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஒரு வேலை மிச்சமில்லாமல் அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். அனுமனுக்கு ஒரு வேலை கூட மிச்சம் வைக்காமல் தாங்களே அனைத்தையும் எடுத்துக் கொண்டுவிட்டதாக மகிழ்ச்சியுடன் இருந்தனர். அப்போது அனுமனைப் பார்த்து ராமர் கேட்டார். “அனுமனே, உனக்கு என்ன வேலை வேண்டும்? மீதமுள்ள வேலைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்” என்று கூறுகிறார்.
“ராமச்சந்திர பிரபுவுக்கு, கொட்டாவி வரும்பொழுது, என் விரல்களால் சொடுக்குப் போடும் வேலை தர வேண்டும்.” என்று விண்ணப்பித்துக் கொண்டார். கொட்டாவி என்பது எப்பொழுது வரும் என்று தெரியாது அதனால், எப்பொழுதும் ராமர் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். மேலும் முப்பொழுதும் ராமர் அருகிலேயே இருக்கும் நிலையும் ஏற்படும். அந்த பாக்கியம் தனக்குப் போதும் என்று ஆஞ்சநேயர் கூற, அவரது சமயோசிதப் புத்தியைக் கண்டு ராமர் அவையில் இருந்தவர்கள் அதிசயித்தார்கள்.
ஆஞ்சனேயரின் வருத்தம்
சீதாப்பிராட்டி வனத்தில் இருந்த நாட்களில் அவரைக் காண அனுமன் காட்டுக்குச் சென்றார். அன்னை சீதா ஒரு பவழமல்லி மரத்தினடியில் அமர்ந்து அங்கு உதிர்ந்து கிடந்த மலர்களால் ராம என்ற நாமத்தை உருவகப்படுத்தினாள். அதனைக் கண்டுகொண்டே ராமனை மனதால் நினைத்து உருகிக் கண்ணில் தாரை தாரையாகக் கண்ணீர் கன்னத்தில் வழிய சிலை போல அமர்ந்திருந்தாள். இதனைக் கண்ட அனுமனுக்கு மன வருத்தம் ஏற்பட்டது. தனக்கு இப்படி ராம நாமத்தை சொன்னவுடன் கண்ணில் நீர் வரவில்லையே என்று வருந்துகிறார். பின்னர் சீதையிடம் தனக்கு இதனைக் கற்றுத் தருமாறு வேண்டுகிறார். பக்திக்கு உதாரணமாக இருக்கின்ற அனுமனே சீதாப்பிராட்டியிடம் கேட்டு அறிந்தார்.
வினய ஆஞ்சனேயருக்கு லட்சார்ச்சனை
திருமழிசையில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி சமேத ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் தேவஸ்தான திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ வினய ஆஞ்சனேய சுவாமிக்கு, ஆஞ்சனேய ஜெயந்தியை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. டிசம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்களுக்கு, காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சனேயரை, பாஸ்போர்ட்டுடன் சென்று வணங்கினால் வெளிநாட்டு விசா கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இத்திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் உள்ளது. சென்னை பூந்தமல்லி வழியாகச் செல்லலாம்.
மயிலை ஸ்ரீ பஞ்சமுக த்வாதஸ்புஜ ஆஞ்சநேயர் ஜெயந்தி மகோத்சவம் 29.12.16 அன்று தொடங்கி 07.01.16 வரை, மயிலை பி.கே மஹால் மண்டபத்தில் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT