Published : 25 Jan 2023 06:33 AM
Last Updated : 25 Jan 2023 06:33 AM

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழநி கோயிலில் தொடர் வேள்வி வழிபாடு

பழநி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் நேற்று நடந்த இரண்டாம் கால வேள்வி. படம்: நா. தங்கரத்தினம்

பழநி: பழநி தண்டாயுதபாணி கோயிலில் வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது. எட்டு கால வேள்வி பூஜைகள் நிறைவுபெற்ற பின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று இரண்டாம் கால வேள்வி வழிபாட்டின்போது இறைவன் அனுமதி பெறுதல், விநாயகர் பூஜை, தூமொழி பகர்தல், புனித நீர்க்குட வழிபாடு, தொடர்ந்து முற்றோதுதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இதையடுத்து, திருப்புகழ், திருமுறைகள், புனித நூல் வழிபாடு, 96 மூலிகைப் பொருட்கள், விதை, வேர், அறுசுவை சாதம், பலகாரத்துடன் சிறப்பு வேள்வி நடைபெற்றது. அப்போது யாகசாலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4.30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி வழிபாடு தொடங்கி இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.

அப்போது திருவொளி வழிபாடு, திருவமுது வழங்குதல் மற்றும் ஓதுவார்களின் முற்றோதுதல் விண்ணப்பம், நாகசுவர கச்சேரி நடைபெற்றது. இன்று (ஜன.25) காலை 9 மணிக்கு நான்காம் கால வேள்வி வழிபாட்டில் நீராட்டல், தீ வளர்த்தல், உருவேற்றல், படையல் மற்றும் திருவொளி வழிபாடு நடைபெற உள்ளது. மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வியின் போது 96 ஆகுதி வேள்வி, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்களை வைத்து பூஜை, பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது.

26-ம் தேதி மலைக்கோயிலுக்குச் செல்லும் படிப்பாதைகளில் உள்ள மற்ற கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. வரும் 27-ம் தேதி அதிகாலை வரை எட்டு கால வேள்வி பூஜைகள் நிறைவுபெற்று அதன் பின் காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கோயில் ராஜகோபுரம், தங்க விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x