Last Updated : 08 Dec, 2016 10:40 AM

 

Published : 08 Dec 2016 10:40 AM
Last Updated : 08 Dec 2016 10:40 AM

அக்னி தெய்வம் அண்ணாமலையார்

கார்த்திகை தீபம்: டிசம்பர் 12

மனித வாழ்வுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் தேவையானது ஐம்பூதங்கள் எனப்படும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பூமி ஆகியவை. இவற்றை இயற்கை தெய்வங்கள் என்று கூறினால் மிகையில்லை. இந்த இயற்கையைக் குறிப்பிடும் வண்ணம் தெய்வங்கள் திருவுரு எடுத்துக் கொள்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நெருப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் காட்டுவது திருவண்ணாமலை. ஈசன் இணையடி நீழலே என்றார் திருநாவுக்கரசர். ஈசனின் திருவடிச் சிறப்பைப் போற்றுகிறார் திருமூலர்.

திருவடி யேசிவ மாவது தேரில்

திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்

திருவடி யேசிவ கதியது செப்பில்

திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே

என்பது அத்திருமூலர் வாக்கு.

சிவனின் திருவடிகளே அனைத்துப் பெருமையையும் அளிக்கவல்லது.

நெருப்பாய் நின்ற ஈசனின் இணையடியானது நிழல் என்கிறார் திருநாவுக்கரசர். நெருப்பு கொதிக்குமே தவிர எப்படி நிழலான தண்மையை அதாவது குளிர்ச்சியைத் தரும்?

குற்றமில்லாத திருநாவுக்கரசரின் அரிய பதிகம் விளக்குகிறது.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

வீணையில் விரிசல், உடைப்பு போன்றவை இருந்தால் அதிலிருந்து எழும் இசையானது சுநாதமாக இருக்காது. மாசில் வீணை என்பதற்குக் குற்றமில்லாத வீணையிலிருந்து எழும் இசை என்பது பொருள்.

மாலை மதியமும் என்பதில் மாலை, நேரத்தையும் மதியம், சந்திரனையும் குறிக்கும். மாலை நேரத்துச் சந்திர ஒளி, மிக மென்மையான குளிர்ச்சியைக் கொடுக்கும். அது உடலுக்கும் மனத்துக்கும் இதமாக இருக்கும். வேனிற் காலத்துத் தென்றல், உடலை தொட்டுத் தொட்டுப் போகும். ஒவ்வொரு முறை தொடும்பொழுதும் அதன் சில்லிப்பு அனுபோகமாக இருக்கும். அவ்வுணர்வு கொழுத்த இள நுங்குகளைச் சுவைத்தால் ஏற்படும் இன்பம்போல இருக்கும். வண்டுகள் மொய்க்கும் தாமரைப் பூக்களைக் கொண்ட பொய்கையிலிருந்து திருக்குளத்திலிருந்து எழும் வாசனை, தரும் இன்பத்தைப் போன்றது, எந்தையாகிய ஈசனின் திருவடி நீழலே என்று முத்தாய்ப்பாய் முடிகிறார் திருநாவுக்கரசர்.

நெருப்பாய் அடி, முடி காண முடியாத அளவு விஸ்வரூபம் எடுத்த ஈசனது திருவடியானது பக்தர்களுக்குக் குளுமையைத்தான் அளிக்கும் என பலவாறாக அக்குளுமையை விளக்கி, பாடல் மூலம் அறுதியிட்டுக் கூறுகிறார் திருநாவுக்கரசர். அத்திருப்பாடல் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்குப் பொருந்தும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

அதனை நிரூபிப்பதுபோல, திருவண்ணாமலை திருத்தலத்தில், தெய்வங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் எம்பெருமான் விஷ்ணு, சிவனின் அடியைத் தேடிப் போனார். அதனால் போட்டியை முறியடித்து வென்று இன்றும் இந்நிலவுகில் திருத்தலங்களில் நடந்தும், நின்றும், அமர்ந்தும், கிடந்தும் தெய்வத் திருவுருவாய் அருள்பாலிக்கிறார்.

திவ்ய தம்பதிகள் போலக் காட்சி அளிக்கும் பெரிய மலை அதன் அருகே சின்ன மலை எனத் தோற்றமளிக்கும், திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் பல புண்ணியப் பலன்களை அளிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. தீபம் மன இருள் நீக்கும். நலம் பல விளைவிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x