Published : 24 Jan 2023 04:30 AM
Last Updated : 24 Jan 2023 04:30 AM
திருச்சி / தஞ்சாவூர்: தமிழகத்தில் 5 இடங்களில் அந்தந்தகோயில் நிர்வாகம் சார்பில் மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
தஞ்சாவூரில் பெரிய கோயில் சார்பில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவை (பிப்.18) முன்னிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் திலகர் திடலை நேற்று மாலை தேர்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில், கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகிய இடங்களில் இந்தாண்டு மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவை அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ நடத்தவில்லை. அந்தந்த கோயில் நிர்வாகம்தான் நடத்துகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நன்கொடையாளர்கள் யானையைக் கொடுத்தால் வளர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றார். அப்போது, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், கும்பகோணம் அருகேபட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்க ரதம் உலாவை தொடங்கி வைத்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பின்னர் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மங்களம் யானைக்கு கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தை திறந்து வைத்தார். அப்போது, எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியது: அறநிலையத்துறை தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தால், பதிலளிக்க தயாராக உள்ளோம். கோயிலுக்கு தானமாகவரும் பசுக்கள், கோயில் பயன்பாட்டுக்கு போக மீதமுள்ளவை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சுயஉதவிக் குழுவினரின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று தான் தானமாக வரும் பிற பொருட்களையும் முறையற்று யாருக்கும் அளிப்பதில்லை. இதில் எங்கேனும் தவறு நடந்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் யானைகளுக்கு இருக்கும் இடத்திலேயே 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், மருத்துவர்களின் அறிவுரைப்படி உணவுகள் வழங்கப்படுகின்றன. எனவே, புத்துணர்வு முகாம்கள் தேவையில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT