Published : 23 Jan 2023 04:15 AM
Last Updated : 23 Jan 2023 04:15 AM
சேலம்: சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கருங்கல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, சுற்றுப் பிரகார மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் கட்டுமானம் பழமை காரணமாக, பழுதடைந்து இருந்தது. இதனால், ராஜகோபுரம் தவிர்த்து, கோயிலின் கருவறை, மகா மண்டபம் உள்ளிட்டவை அடங்கிய பழைய கட்டுமானம் முழுவதும் அகற்றப்பட்டு, 2017-ம் ஆண்டு நவம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
திருப்பணியில் கருவறை, மகாமண்டபம், எடுத்துக்காட்டு மண்டபம்ஆகியவை கருங்கல் கட்டுமானமாகவும், சுற்றுப் பிரகார மண்டபம்சிமென்ட் கான்கிரீட் கட்டுமானமாகவும் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிகவும் கடினமான கருங்கல்கட்டுமானப் பணிகள் 95 சதவீதத்துக்கு மேல் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, சிமென்ட் கான்கிரீட்டைப் பயன்படுத்தி சுற்றுப் பிரகார மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியது: கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கட்டுமானத்தில், கருவறை, அர்த்த மண்டபம், எடுத்துக்காட்டு மண்டபம் ஆகியவை முழுவதும் கருங்கற்களால் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கருங்கற்களால் கட்டுவதால், கோயிலின் கட்டுமானம் ஆயிரம் ஆண்டுக்கு மேல் உறுதியாக இருக்கும்.
கருங்கல் கட்டுமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் என்பதால், பணிகள் மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. எனினும், தற்போது கருங்கல் கட்டுமானப் பணிகள் 95 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துவிட்டன. கருவறை மீதான கோபுரம் அமைக்கும் பணியும் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.
தற்போது முக்கிய பணியாக, சுற்றுப் பிரகார மண்டபம், உப தெய்வங்களின் சந்நிதி ஆகியவை மட்டுமே உள்ளன. அதில், சுற்றுப் பிரகார மண்டபம் அமைப்பதற்காக கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டுவிட்டன. இந்த தூண்கள் மீது, கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. மேலும், உப தெய்வங்கள் சந்நிதி கட்டுமானமும் தொடங்கவுள்ளது.
இந்தப் பணிகள் உள்பட ஒட்டுமொத்தப் பணிகளும் ஒரு சிலமாதங்களில் முழுமையாக பூர்த்தி யடையும். ராஜகோபுரத்துக்கு வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட திருப்பணிகள் அனைத்தையும் ஓரிரு மாதத்தில் நிறைவேற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து, ஆடிப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT