Published : 19 Jan 2023 06:09 PM
Last Updated : 19 Jan 2023 06:09 PM
திருவண்ணாமலை: கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அண்ணாமலையாரின் தீர்த்தவாரி, தென்பெண்ணையாற்றில் இன்று(19-ம் தேதி) வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் தீர்த்தவாரி என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தை மாதம் 5-ம் நாளன்று தென் பெண்ணையாறு, ரத சப்தமி நாளன்று கலசப்பாக்கம் அருகே உள்ள செய்யாறு, மாசி மகம் நாளன்று பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி, தை மாதம் 5-ம் நாளான இன்று(19-ம் தேதி), கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை தென் பெண்ணையாற்றில் அண்ணாமலையாரின் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளினார். பின்னர் அவர், தீர்த்தவாரிக்கு புறப்பட்டு சென்றார். அவருக்கு வழியெங்கும் கற்பூர தீபாராதனை காண்பித்தும், அர்ச்சனை செய்தும் கிராம மக்கள் வழிபட்டனர்.
இதன் நிறைவாக, தென்பெண்ணையாற்றில் அண்ணாமலையாரின் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு தரிசித்தனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, கோயிலை நாளை(20-ம் தேதி) வந்தடைகிறார். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அண்ணாமலையாரின் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள செய்யாறு, கமண்டல நாக நதி மற்றும் துரிஞ்சலாறு உள்ளிட்ட ஆறுகள், ஓடைகளில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு கோயில்களில் இருந்து அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சுவாமிகள் வருகை தந்து, தீர்த்தவாரியில் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிகளை தரிசித்து வணங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT