Published : 04 Jan 2023 06:38 AM
Last Updated : 04 Jan 2023 06:38 AM
திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் (மோகன க்ஷேத்ரம்) காளமேகப் பெருமாள் கோயில் 103-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் உள்ள சக்கரத் தாழ்வார் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
இத்தலத்தை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
நம்மாழ்வார் பாசுரம்:
நாமடைந்தால் நல் அரண் நமக்கென்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று என்னுமின் ஏத்துமின் நமர்கான்
(3476 திருவாய்மொழி 10-1-10)
மூலவர்: காளமேகப் பெருமாள் | உற்சவர்: திருமோகூர் ஆப்தன் | தாயார்: மோகன வல்லி | தல விருட்சம்: வில்வம் | தீர்த்தம்: தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம்.
பாற்கடலைக் கடைந்து அதன் மூலம் கிடைத்த அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்வதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எழுந்த சர்ச்சை பெரிதானது. தங்களுக்கு உதவுமாறு தேவர்கள் திருமாலை அழைத்தனர். (பாற்கடலில் அமிர்தம் கடையும்போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்துக்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது) அவர்களின் கோரிக்கையை ஏற்ற திருமால், மோகினி வேடத்தில் வந்தார். அப்போது அசுரர்கள் அசந்த நேரம், அமிர்தத்தை தேவர்களிடம் கொடுத்து விடுகிறார் திருமால். இதனால் தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர்.
ஒருமுறை புலஸ்தியர் என்னும் முனிவர், திருமாலின் மோகினி அவதாரத்தை தரிசிக்க விரும்பினார். திருமாலும் அவ்வாறே அருள்பாலித்தார். அதே கோலத்துடன் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காளமேகப் பெருமாள், மேகம் மழையைத் தருவது போல பக்தர்களுக்கு அருளைத் தருகிறார். பஞ்ச ஆயுதங்கள், மார்பில் சாளக்கிராம மாலையுடன் அருள்புரிகிறார். தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாக இருப்பதால் உற்சவருக்கு ‘ஆப்தன்’ என்ற பெயர் உருவாயிற்று. காளமேகப்பெருமாளுக்கு கிரீடம், சங்கு, சக்கரம் ஆகியவை வெண் கற்களால் செய்து அணிவிக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு சாளக்கிராம மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
தேவர்கள் அசுரர்கள் கொடுக்கும் துன்பங்களைப் பற்றி முறையிட திருமாலை காணச் சென்றபோது திருமால் நித்திரையில் இருந்தார். (கள்ள நித்திரை – தூங்குவது போல் இருப்பது) அதனால் தங்கள் குறைகளை ஸ்ரீதேவி, பூதேவியிடம் கூறிவிட்டு வந்தனர். உடனே திருமால் மோகினி வடிவம் எடுத்து அவர்களைக் காத்தார். இதனால் இத்தல பெருமாளுக்கு ‘பிரார்த்தனை சயனப் பெருமாள்’ என்று பெயர் விளங்கிற்று.
இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்பதால் பெருமாள் ‘மோட்சம் தரும் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் பெண் வடிவம் எடுத்த தலம் என்பதால், தாயாருக்கு என்று விழா எதுவும் கிடையாது. நவராத்திரியில் விசேஷ பூஜை உண்டு. பங்குனி உத்திரம் அன்றுமட்டும் சுவாமி, தாயார் சந்நிதிக்குச் சென்று சேர்த்தி சேவை தருகிறார். இந்த வைபவம் மூன்று மணி நேரம் மட்டுமே நடைபெறும். இவரைப் ‘படி தாண்டா பத்தினி’ என்று சிறப்பிக்கிறார்கள்.
மோகனவல்லி தாயார், சந்நிதியை விட்டு வெளியேறுவதில்லை என்பதால், வைகாசி பிரம்மோற்சவத்தில் காளமேகப் பெருமாள் ஆண்டாளின் மாலையை அணிந்தபடி சேர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடைபெறும் தெப்பத் திருவிழா, மார்கழி 28-ம் தேதி ஆகிய நாட்களில் பெருமாளை ஆண்டாளுடன் சேவிக்கலாம். வைகாசி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள், மாசி மகத்தில் பெருமாள் மோகினி வடிவில் அருள்பாலிப்பார். மாசி மகத்தன்று ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்குச் செல்வார். அன்று இரவு கருட வாகனத்தில் எழுந்தருளி கஜேந்திர மோட்சம் நடைபெறும்.
பெருமாள் தலங்களில் பொதுவாக வில்வம் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இத்தலத்தில் வில்வமே தலவிருட்சமாக இருப்பது சிறப்பு. தாயாருக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி, தர்ப்பணம் செய்பவர்கள் இத்தலத்தில் மோக்ஷ தீபம் (மாவிளக்கு) ஏற்றி வழிபடுகின்றனர். (மாவிளக்கு – அரிசி மாவில் செய்த அகல் போன்ற அமைப்பில் ஏற்றப்படும் தீபம்). 3, 5, 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபத்தை ஏற்றுவது வழக்கம்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் அவர் மேல் பகுதியில் மடியில் இரணியனை மடியில் கிடத்தியபடி உள்ள நரசிம்மரும், கீழ் பகுதியில் லட்சுமி வராகரும் அருள்பாலிக்கின்றனர். ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, நோய்கள், வியாபார அபிவிருத்தி, செய்வினைக் கோளாறு, கடன் தொல்லை, வழக்குகள் என்று பல பிரச்சினைகளுக்கு சக்கரத்தாழ்வார் ஆறுதலும் தீர்வும் அளிக்கிறார்.
சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமுள்ள நரசிம்மரின் 4 கைகளிலும் 4 சக்கரங்கள் உள்ளன. சங்கு கிடையாது.
சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் மன்மதன் வழிபாடு நடைபெறுகிறது. முன்மண்டப தூண்களில் மன்மதன், ரதி சிற்பங்கள் உள்ளன. அழகில்லாததால் திருமணம் தடைபடுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்வது உண்டு. மன்மதன், ரதிக்கு சந்தனம் பூசி, நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைப்பது இன்றும் நடைபெறுகிறது.
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். இக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர், ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகின்றன.
திருப்பாற்கடல் பொய்கைக்குக் கிழக்கில் ஒரு விருட்சம் இருக்கிறது. இந்த மரம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும், திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபரயுகத்தில் வில்வ மரமாகவும், கலியுகத்தில் அரச மரமாகவும் திகழ்கிறது. இத்தலத்தில் ஆதிசேஷனுக்குத் தங்கக் கவசங்கள் இருப்பது சிறப்பு.
வைகாசி பிரம்மோற்சவத்தில் தினமும் சுவாமியுடன் நம்மாழ்வார் அருள்பாலிக்கிறார். நம்மாழ்வார் இக்கோயில்மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.
வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இத்தலம் நவக்கிரஹ தோஷங்களை போக்கக் கூடிய தலம். இதற்கு ஸ்ரீ மோகன க்ஷேத்ரம் என்ற பெயர் உண்டு. திருமோகூர் ராகு கேது ஸ்தலமாகும். ராகு கேதுவால் உண்டாகும் தோஷங்களுக்கு திருமோகூர் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
அமைவிடம்: மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT