Published : 30 Dec 2022 04:27 AM
Last Updated : 30 Dec 2022 04:27 AM
குவலயாபீடத்தை அழித்த மாயோன்
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கு என்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய்.
(குறிப்பு: இந்த பாடலில் துயிலிலிருந்து விழித்துக்கொண்ட தோழியிடம் சிறு வாக்குவாதம் நடக்கிறது)
விளக்கவுரை:
‘‘இளங்கிளி போன்றவளே! இன்னுமா தூங்குகிறாய்?’’
‘‘குணப்பூர்ணைகளே! சிலுகு சிலுகென்று அழைக்காதீர்கள் வந்துகொண்டு இருக்கிறேன்.’’
‘‘வாயாடி! நீ சொல்லும் கட்டுக்கதைகளை நாங்கள் முன்னமே அறிவோமே!’’
‘‘நீங்கள்தான் வாயாடிகள்! பரவாயில்லை, நானே வாயாடியாக இருந்துவிட்டுப் போகிறேன்.’’
(நானா வாயாடி? நீங்கள்தான் வாயாடி என்று கூறி, பிறகு அந்த வாக்குவாதம் நீள்வதை விரும்பாமல் நானே வாயாடி என்கிறாள்)
‘‘உடனே எழுந்து வா! உனக்கு மட்டும் வேறு பாதையா?’’
‘‘எல்லோரும் வந்துவிட்டார்களா?’’
‘‘நீயே வந்து எண்ணிப் பார்.’’
‘‘சரி, நான் வந்து என்ன செய்வது?’’
வலியக் குவலயாபீட யானையைக் கொன்று,
விரோதிகளின் வலிமையை அழிக்கும் வல்லமையுடைய மாயனான
கண்ணனின் புகழ் பாட எழுந்துவா!
(எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப் பாட எழுந்துவா!)
இதையும் அறிவோம்: தினசரி இரவு ஆண்டாளுக்கு சாற்றப்படும் மாலை, மறுநாள் காலை மேளதாளத்துடன் வடபத்ரசாயி பெருமாளுக்கு சூடிக் களைந்த உகப்பான மாலையாக சமர்ப்பிக்கப்பட்டு, பிறகு அம்மாலை பிரசாதம் பெரியாழ்வாருக்கு சாற்றப்படுகிறது!
- சுஜாதா தேசிகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT