Published : 15 Dec 2016 11:24 AM
Last Updated : 15 Dec 2016 11:24 AM
நபிகளார் சிறு வயது முதலே உயரிய ஒழுக்கப் பண்பாளராகவே இருந்தார். மென்மையும், நளினமும் அவரது அணிகலன்களாகத் திகழ்ந்தன. சக மனிதர் மீது அவர் கொண்ட அன்பும், நேசமும் அளப்பரியது. ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்து மனித இனத்தை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஈடில்லாதவை. இளம் வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்த அனாதையான நபிகளார், சக மனிதர்களின் துன்பங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் தாயாக இருந்தார்.
நபிகளார் காலத்தில், சமூகத்தில் நிலவிவந்த சீர்கேடுகள் சதா அவரை அலைக்கழிக்க, அவற்றிற்கான தீர்வு தேடி அவர் தனிமையில் இருக்கலானார். அதற்காக அவர் மக்காவுக்கு வெளியில் இருந்த ஹிரா மலையின் நூர் என்னும் குகையில் தனித்தும், விழித்தும், பசித்துமிருக்க நேர்ந்தது. சக மனிதர்களின் மீதான இத்தகைய கவலையால் இறைவனின் தரப்பிலிருந்து பெற்றதுதான் திருக்குர்ஆன் என்னும் வாழ்வியல் வழிகாட்டியின் துவக்கமானது.
எது பிறருக்கு அருளுரையாய் இறைவனின் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதோ அதன்படி தம்மை வடிமைத்துக் கொண்டு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் அவர். அந்த இறை வழிகாட்டுதல் ஒன்றே மனிதப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று உறுதியாக நம்பினார். அதை, உற்றார், உறவினர், அண்டை, அயலார் என்று அனைத்துத் தரப்பிலும் சேரக்க முயன்றார். மிகவும் இனிய வார்த்தைகளால், மென்மையான போக்கால் தமது பரப்புரைகளைச் சுமந்து சென்றார். மக்கத்துத் தெருக்கள், வணிகச் சந்தைகள், பிரமுகர்களின் கூடாரங்கள், தாயிப் போன்ற அண்டை நகர வீதிகள் என்று சுற்றி அலைந்து அதற்காக அவர் பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கான உதாரண சம்பவம் இது.
உணவை மறுத்த நபிகளார்
மிகவும் களைப்புடன் அப்போதுதான் திரும்பியிருந்தார் நபிகளார். தமது போதனைகளை நிராகரிக்கும் மக்கள் குறித்து பெரும் கவலை அவர் முகத்தில் வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமது அன்புக் கணவரின் முகவாட்டத்தைக் கண்டு பதறிப்போன கதீஜா நாச்சியார் அமுது படைக்க அவரை அமர வைக்கிறார்.
பசியோடிருந்த நபிகளாரும் ஒரு கவளம் உணவை உண்ண வாயருகே கொண்டு செல்கிறார். அதே நேரத்தில், வீட்டுக்கு வெளியே அயலகத்திலிருந்து வந்த ஒட்டகக் குழுவொன்று பாதையைக் கடந்து செல்லும் சத்தம் கேட்கிறது.
உண்ண வாயருகே கொண்டு சென்ற உணவுக் கவளத்தை வைத்து விட்டு முக மலர்ச்சியோடு நபிகளார் எழுந்து கொள்கிறார். பதறிப்போன கதீஜா நாச்சியாரோ, “அண்ணலே..! சோறு உண்டுவிட்டுச் செல்லலாமே” என்று அன்பொழுகக் கேட்கிறார்.
“கதீஜா.. கேட்டீரா.. . வீட்டுக்கு வெளியே ஒட்டகக் குழுவின் காலடி சப்தத்தை..? ஆம்… அயலகத்திலிருந்து ஏதோ வணிகக் கூட்டமொன்று இவ்வழியே செல்லும் அறிகுறி இது.”
“உண்மைதான் அண்ணலே..! இருக்கட்டும்… ஒரேயொரு கவளம் உணவாவது உண்டுவிட்டு செல்லலாமே.!” என்று சொன்ன கதீஜா நாச்சியாரை இடைமறித்த நபிகளார்,
“என்ன சொன்னீர் கதீஜா? நான் ஒரு கவளம் உணவு உண்டுவிட்டுச் செல்வதற்குள் அந்த ஒட்டகக் குழு, மக்காவைக் கடந்துவிட்டால் நான், அவர்களுக்கு எனது போதனைகளைச் சொல்ல முடியாத நிலைமைக்கு அல்லவா ஆளாகிவிடுவேன்..! நாளை நான் இதற்காக இறைசந்நிதியில் அல்லவா பதில் சொல்லியாக வேண்டும்!” என்று பதற்றத்துடன் நபிகளார் சொல்கிறார்.
இந்த அக்கறை, சமூக அவலங்களிலிருந்து மக்களைக் கரைசேர்ப்பதற்கான துடிதுடிப்பு ஏறக்குறைய 23 ஆண்டுகள் தொடர்ந்தது. மக்காவைத் துறந்து மதீனாவரை சென்றது. நபிகளாரின் அரசியல் தலைமையகமாக மதீனா மாறியும், பல்வேறு போர்முனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
கடைசியில் மக்கா வீழ்ந்து முழு அரசியல் அதிகாரம் நபிகளார் வசமான அந்த இறுதித் தருணங்களில், நபிகளாரின் கவலை முற்றுப் பெற்றதாய் இல்லை. ஹிரா மலையின் நூர் குகையில் முதன்முதலில் பெற்ற வேதவெளிப்பாட்டிலிருந்து அரஃபாத் திடல்வரை இந்த கவலையே நபிகளாருக்குள் மேலோங்கி இருந்தது.
நபிகளாரின் அய்யப்பாடு
“பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றினேனா?” - என்ற ஐயப்பாடு நபிகளாரின் ஹஜ்ஜதுல் விதா என்னும் அந்த இறுதி ஹஜ்ஜிலும் எதிரொலிக்கிறது.
அலைகடல்போல வெள்ளுடையில் லட்சக்கணக்கான நபித்தோழர், தோழியர்களால் அரஃபாத் திடல் நிரம்பி வழிகிறது. தமது நபித்துவ உழைப்பின் பலன் அறுவடையாக நபிகளார் அங்கு குழுமியிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் காண்கிறார். திருக்குர்ஆனின் கடைசி வேத வெளிப்பாடும் அங்கு முற்றுப் பெறுகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹஜ்ஜுப் பேருரையாக வரலாற்றில் போற்றப்படும் அந்த பேருரைக்கு பின், நபிகளார் மனதில் தொக்கி நின்ற கேள்வி அத்திடலில் மக்கள் முன் இப்படி வெளிப்படுகிறது:
“மக்களே…! உங்களுக்கு நான் இறைவனின் திருச்செய்தியை முற்றிலும் சரியான முறையில் சேர்த்துவிட்டேனா?”
தங்கள் கொள்கை போதனைகளின் அடிப்படையிலான ஒரு கட்டமைப்பு, அரசியல் அதிகாரம் மக்காவைத் தாண்டி மதீனாவில் உருவெடுத்திருந்தது. அந்நிலையிலும் நபிகளாரின் உள்ளத்திலிருந்து அந்த கேள்வி உருவெடுக்கிறது என்பது முக்கியமானது!
அரஃபா திடலில் குழுமியிருந்த மக்கள், “ஆம்… இறைவனின் திருத்தூதரே! தங்கள் பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றிவிட்டீர்கள்!” என்று விண்ணதிர முழங்குகிறார்கள்.
நபிகளாரின் திருமுகம், பூரண நிலவொளியாய் பிரகாசிக்கிறது. அதரங்களில் புன்னகை இழையோடுகிறது. நாசியிலிருந்து பெருமூச்சு வெளிப்படுகிறது. தமது சுட்டுவிரலை வானத்தை நோக்கி உயர்த்தி, “இறைவா… இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை அவர் உச்சரிக்கிறார்.
வாழும் சமூகத்தின் மீதான நபிகளாரின் இந்த அளவற்ற நேசத்தைத்தான் திருக்குர்ஆன் இப்படி சிலாகிக்கிறது:
“இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் இவர்கள் பின்னே கவலைப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்வீரோ நபியே..!”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT