Published : 29 Dec 2022 04:21 AM
Last Updated : 29 Dec 2022 04:21 AM

தாமரைக் கண்ணனை வழிபடுவோம்: தித்திக்கும் திருப்பாவை - 14

தாமரைக் கண்ணனை வழிபடுவோம்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்

நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணனைப் பாடு ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை:

உன் வீட்டுப் பின்புறத் தோட்டத்தின் சிறு குளத்தில்

செந்தாமரை மலர்ந்து, அல்லி மலர்கள் மூடிக்கொண்டு விட்டன.

காவி அணிந்த வெளுத்த பற்களையுடைய துறவிகள்

தங்கள் கோயில் வழிபாட்டுக்குச் சங்கு ஊதப் போகிறார்கள்.

எங்களை முன்னமே எழுப்புவதாக வாயால் அளந்த குணபூர்ணியே!

வெட்கமில்லாதவளே! இனிமையாக (மட்டும்) பேச வல்லவளே!!

சங்கு சக்கரம் தரித்த விசாலமான கையையுடைய

கமலக்கண்ணனைப் பாட வேண்டும் எழுந்திரு!

(எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது தூங்குதல் முறையோ?)

இதையும் அறிவோம்:

ஸ்ரீ ராமருக்கு வில்; கண்ணனுக்குப் புல்லாங்குழல் என்ற அடையாளம் போல் ஆண்டாளுக்குக் கிளி! திருவரங்கம் பெருமாளை திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய செல்லக் கிளியைத் தூதாக அனுப்பினாள் ஆண்டாள். தினமும் ஆண்டாள் திருக்கரத்தில் சாத்தப்படும் கிளி, வாழைத்தண்டு நார்களில் செய்யப்பட்டு, மரவள்ளிக்கிழங்கு இலை உடல் பகுதிக்கும், மாதுளைப் பூவில் மூக்கு; வாலுக்கு வெள்ளை அரளி இலைகள்; இறகுகளுக்குப் பச்சை பனையோலை; கால்களை மூங்கில் குச்சிகள் கொண்டு அமைத்து, அரளி, நந்தியாவட்டை பூக்கள் கொண்டு அலங்கரிக்கிறார்கள். கிளி பொதுவாக தோட்டத்தில் இருக்கும். ஆனால் ஆண்டாள் கையில் இருக்கும் கிளியே ஒரு தோட்டம்!

- சுஜாதா தேசிகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x