Published : 29 Dec 2022 05:28 AM
Last Updated : 29 Dec 2022 05:28 AM

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் மார்ச் 3, 4-ல் திருவிழா

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம்.

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு அமைந்துள்ளது.

புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களை காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். இதற்காக ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது.

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தி வந்தனர். 1974-ல் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசு சார்பாக கச்சத்தீவில் 2016-ல் புதிய தேவாலயம் திறக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து சராசரியாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.

இந்நிலையில், இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் ஆட்சியர் க.மகேசன் தலைமையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா ஏற்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2023-ம் ஆண்டு மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x