Published : 21 Dec 2022 07:05 AM
Last Updated : 21 Dec 2022 07:05 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 94 | தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸர், அரவிந்தலோசனர் கோயில்கள் 

முனைவர் கே.சுந்தரராமன் 

108 வைணவ திவ்ய தேசங்களில், தொகைவிலிமங்கலம் இரட்டைத் திருப்பதிகளான ஸ்ரீநிவாஸர், அரவிந்தலோசனர் கோயில்கள், 94-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன. தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் நவதிருப்பதிகளில் 8-வது திருப்பதியாகவும், ராகுவுக்கான தலமாகவும் போற்றப்படுகிறது.

இத்தலத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

துவளில் மாமணி மாட மோங்குந் தொலைவில்லி மங்கலம் தொழும்

இவளை நீர் இனி அன்னை மீர் உமக் காசையில்லை விடுமினோ

தவளவொண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கணென்றும்

குவளையண் மலர்கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே

திருவாய்மொழி 3271 / 3387 (6-5-1)


மூலவர்: ஸ்ரீநிவாஸர் | உற்சவர்: ஸ்ரீதேவர் பிரான் | தாயார்: அலமேலு மங்கை தாயார், பத்மாவதி தாயார் | தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், வருணத் தீர்த்தம் | விமானம்: குப்த விமானம்

குப்த விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, கல்வியில் சிறந்து விளங்க இத்தல பெருமாள் அருள்வார். தென் திருப்பேரை அருகே உள்ள இந்த தலம் இரட்டைத் திருப்பதிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. அடர்ந்த காட்டில் அமைந்துள்ள இக்கோயில் அருகில் அதிக வீடுகள் இல்லை.


தொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் கோயில்

நவதிருப்பதியில் 9-வது திருப்பதியாகவும், இரட்டைத் திருப்பதியில் கேதுத் தலமாகவும் கருதப்படும் இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும் தாம் மலிந்து

இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லி மங்கலம்

கருந் தடம் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்

இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே.

மூலவர்: அரவிந்தலோசனர் | உற்சவர்: செந்தாமரைக் கண்ணன் | தாயார்: கருர்ந்தடங்கண்ணி | தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம் | விமானம்: குப்த விமானம்

குப்த விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் அருள்பாலிக்கும் அரவிந்தலோசனர் பெருமாள், திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் பெற, கல்வியில் சிறந்து விளங்க அருள்பாலிக்கிறார். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

திருவிழாக்கள்: இரட்டைத் திருப்பதிகளில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x