Published : 15 Dec 2022 04:26 AM
Last Updated : 15 Dec 2022 04:26 AM

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் ‘தித்திக்கும் திருப்பாவை’

மா ர்கழி மாதம் நாளை தொடங்குகிறது. உடனே நமக்கு ஆண்டாளும், திருப்பாவையும் நினைவுக்கு வருவது இயல்பு. ஒவ்வொரு முறையும் திருப்பாவையைப் படிக்கும்போதும், கேட்கும்போதும் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்டாள் என்ற அந்த சின்னப் பெண் எப்படி எட்டு அடியில் இவ்வளவு விஷயங்களைக் கூறியிருக்கிறாள் என்ற வியப்பே இந்த 5-ஜி யுகத்திலும் நமக்கு ஏற்படுகிறது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். திருப்பாவை ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகிறது.

சங்க நூல்களில் ‘ஆற்றுப்படை’ என்ற இலக்கிய வகை உள்ளது. ‘ஆற்றுப்படை’ என்றால் வழிப்படுத்துதல் அல்லது வழிகாட்டுதல் (ஆறு - வழி; படை - படுத்துதல்). கலைஞர்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்று வரும் வழியில் பரிசு பெறாத கலைஞனிடம் தனக்குப் பொருள் அளித்த வள்ளலைப் பற்றிக் கூறி, அவனிடம் செல்லுமாறு வழிப்படுத்துதல் ‘ஆற்றுப்படை’ என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது.

திருப்பாவை ஓர் உயர்ந்த ஆற்றுப்படை. பரிசு பெற்ற கலைஞன் போல் வரும்வழியில் சொல்லாமல் ஆண்டாள் போகும் வழியிலேயே எல்லோரையும் எழுப்பி, “வாருங்கள் திருமால் என்ற பெரும் வள்ளல் குறித்து நாம் பாடினால் மட்டுமே நமக்கு அழிவில்லாத செல்வம் கிடைக்கும்” என்று தன் தோழிகளை தட்டி எழுப்பி வழிப்படுத்தி பாவை நோன்புக்கு அழைத்துச் செல்கிறாள். ஆண்டாள் கூறிய பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. அகத் தூய்மையாலும் அவனைச் சுலபமாக அடைய முடியும் என்கிறாள். இது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை.

பக்தி ரசம் மட்டுமல்லாது, பழக்கவழக்கங்கள், இயற்கை வர்ணனைகள், பறவைகளின் ஒலி, ஹாஸ்யம், கிராமிய வாழ்க்கை என்று திரைக்கதை போல திருப்பாவையில் சொல்லிஆண்டாள் ஆச்சரியப்படுத்துகிறாள்.

ஆண்டாளின் கதை சுருக்கம்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் துளசி தோட்டத்தில் பெண் குழந்தை ஒன்றை பெரியாழ்வார் கண்டெடுத்து ‘கோதை’ என்று பெயர் சூட்டி வளர்த்தார். பெரியாழ்வார், பெருமாளுக்கு மாலைகள் கட்டும்போது கண்ணன் கதைகளையும், பாசுரங்களையும் சொல்லச் சொல்ல ஆண்டாள் அதை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தாள்.

பெரியாழ்வார், பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளை ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகுபார்த்து, பெருமாளை மணக்க தனக்கு ‘இந்த அழகு பொருந்துமோ?’ என்று நினைத்துக்கொண்டு, அவற்றை அனுப்புவாள். அதை தினமும் செய்து வந்தாள்.

ஒருநாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, ‘இது தகாத காரியம்’ என்று கோபித்துக் கொண்டார்.

அடுத்த முறை சூடாத மாலையை எடுத்துக் கொண்டுசென்றபோது பெருமாள்,“அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உகப்பானது; அதை எடுத்து வாரும்!” என்று கூற, ஆண்டாளின் பெயர் ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்றானது.

கண்ணனை அடைய விரும்பி பழந்தமிழ் வழக்கமான பாவை நோன்பு நோற்றாள். அதை விவரிப்பதே திருப்பாவை.

தினமும் திருப்பாவை படித்தால் நம் மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். ‘திருப்பாவை வியாக்கியானங்கள்’ போன்ற புத்தகங்களை எல்லாம் இன்றைய ‘ட்விட்டர்’ உலகம் படித்து பயன்பெற வேண்டும்.

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றுக்கும் சுருக்கமான விளக்கம், எளிய தமிழில் ‘தித்திக்கும் திருப்பாவை’ என்ற தலைப்பில் நாளை முதல் ‘இந்து தமிழ் திசை’யில் வெளிவர உள்ளது.

- சுஜாதா தேசிகன்

desikann@gmail.com

9845866770

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x