Published : 12 Dec 2022 05:28 AM
Last Updated : 12 Dec 2022 05:28 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 84 | ஆறன்விளை பார்த்தசாரதி கோயில்

முனைவர் கே.சுந்தரராமன் 

108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் 84-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஆகுங்கொல் ஐயமொன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும் மாகம் திகழ் கொடிமாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ் செய்து கை தொழக் கூடுங் கொலோ

மூலவர் : திருக்குறளப்பன் (பார்த்தசாரதி) | தாயார் : பத்மாசினி | தீர்த்தம் : வியாச தீர்த்தம், தேவ புஷ்கரிணி, பம்பா தீர்த்தம் | விமானம் : வாமன விமானம்

தல வரலாறு

மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமிக்குள் பதிந்துவிட்டது. தேரை தூக்கி நிறுத்திவிட்டு மீண்டும் போர் புரிய, கர்ணன் எண்ணும் சமயத்தில் அர்ஜுனன் கர்ணன் மீது அம்பு எய்தியதால், கர்ணன் உயிரிழந்தான். ஆயுதம் ஏதும் இன்றி நின்ற ஒருவரை போரில் வீழ்த்தியது, அர்ஜுனனுக்கு நியாயமாகப் படவில்லை. தர்மயுத்தத்தின்படி அது பெரிய பாவம் என்று எண்ணி அர்ஜுனன் மனம் வருந்தினான்.

ஒருசமயம் பஞ்ச பாண்டவர்கள் கேரள நாட்டுக்கு பயணம் மேற்கொண்டபோது, ஒவ்வொருவரும் ஒரு பெருமாள் தலத்தைப் புதுப்பித்து வழிபட்டனர். அர்ஜுனன் இத்தலத்தை புதுப்பித்து வழிபட்டதாகவும், தனது ஆயுதங்களை, இத்தலத்தருகே உள்ள வன்னி மரத்தடியில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அர்ஜுனன் இத்தலத்தில் பெருமாள் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய தீர்மானம் செய்து, ஆறு மூங்கில் துண்டுகளால் ஆன மிதவையில் அந்த விக்கிரகத்தைக் கொண்டு வந்ததால், இத்தலம் திரு ஆறன் விளை (6 மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது.

வன்னி மரத்தில் இருந்து உதிரும் காய்களை இத்தல துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து விற்பனை நடைபெறுகிறது. வன்னி மரக்காய்களை வாங்கி தலையைச் சுற்றி எறிந்தால், அர்ஜுனன் அம்பால் எதிரிகளின் அம்புகள் சிதைவது போல், நோய்கள் சிதையும் என்பது ஐதீகம். துலாபாரம் கொடுக்கும் வழக்கம் இத்தலத்தில் இருப்பதால், துலாபாரமாக வன்னி மரக்காய்களை கொடுப்பது நடைபெறுகிறது.

போரில் யுத்த தர்மத்துக்கு மாறாக கர்ணனை கொன்றதால், மன நிம்மதிக்காகவும், போரில் பிற உயிர்களைக் கொன்ற பாவம் போக்கவும் அர்ஜுனன் இத்தலத்தில் தவம் மேற்கொண்டான். தவத்தில் மகிழ்ந்த பெருமாள், பார்த்தசாரதியாகவே அர்ஜுனனுக்கு காட்சி அளித்தார்.

​​​​​​​

கோயில் அமைப்பும் சிறப்பும்

வாமன விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோயில் மதிலை ஒட்டி பம்பா நதி ஓடுகிறது. பரசுராமருக்கு தனிச்சந்நிதி உண்டு.

பிரம்மதேவர் இத்தலத்தில் தவம் மேற்கொண்டுள்ளார். பிரம்மதேவர் வைத்திருந்த வேதங்களை, மது, கைடபன் என்ற அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். வேதங்களை மீட்டுத் தருமாறு பிரம்மதேவர் திருமாலை வேண்டினார். திருமாலும் வேதங்களைக் காத்து பிரம்மதேவரிடம் அளித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருமாலை நோக்கி பிரம்மதேவர் இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். திருமாலின் வாமன அவதாரத்தைக் காண இத்தலத்தில் பிரம்மதேவர் தவம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் இத்தலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு, மகரஜோதியின்போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

திருவிழாக்கள்

தை மாத திருவோண நட்சத்திரத்தில் ஆராட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. செங்கண்ணூரிலிருந்து கிழக்கே 6 மைல் தொலைவில் உள்ளது இத்தலம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x