Published : 07 Dec 2022 06:40 AM
Last Updated : 07 Dec 2022 06:40 AM
108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றாறு இமையவரப்பன் கோயில், 82-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. செங்குன்றூர் என்று அழைக்கப்படும் இவ்வூரில் சிற்றாறு என்ற நதி பாய்கிறது. இத்தலத்தில் சிவபெருமானுக்கு திருமால் தரிசனம் கொடுத்துள்ளார்.
இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
எங்கள் செல்சார்பு யாமுடைஅமுதம் இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன்
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால், யாவர் மற்று என் அமர்துணையே.
மூலவர் : இமையவரப்பன் | தாயார் : செங்கமலவல்லி | தீர்த்தம் : சங்க தீர்த்தம், சிற்றாறு | விமானம் : ஜகஜ்ஜோதி விமானம்
தலவரலாறு: மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அன்று 15-வது தினம். பாண்டவர் படையை எதிர்த்து துரோணாச்சாரியார் போர் புரிந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காக, பீமனை அழைத்து, மாளவ நாட்டு மன்னரின் யானையை (அஸ்வத்தாமா) கொல்லச் செய்துவிட்டு, அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று துரோணரிடம் சொல்லச் சொன்னார்.
அதன்படி பீமனும் அஸ்வத்தாமா என்ற யானையை கொன்றுவிட்டு வந்தார். உடனே கிருஷ்ணர் தருமரை அழைத்து, “அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்” என்ற செய்தியை துரோணரிடம் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர் அவ்வாறு கூற இயலாது என்றார். (துரோணாச்சாரியாரின் மகன் பெயரும் அஸ்வத்தாமன் என்பதால் இந்த பெயர் குழப்பத்தைப் பயன்படுத்தி ஒரு நாடகம் நடத்தப்பட உள்ளது.)
உடனே கிருஷ்ணர் தருமரை அழைத்து, “அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதை சத்தமாகச் சொல்லிவிட்டு, ‘அஸ்வத்தாமா என்ற யானை” என்பதை மெதுவாகச் சொன்னால் போதும்” என்று கூறுகிறார். தருமரும் அதற்கு உடன்படுகிறார்.
கிருஷ்ணர் கூறியபடி பீமனும் யானையைக் கொன்றுவிட்டு, அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று சத்தமாகச் சொன்னான். இது துரோணர் காதில் விழுந்தது. ஆனால் அவர் பீமன் சொன்னதை நம்பவில்லை. விஷயத்தை உறுதி செய்துகொள்வதற்காக, தருமரைக் கேட்கிறார்.
உடனே தருமரும், துரோணாச்சாரியாரைப் பார்த்து, “ஆமாம். அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்” என்பதை சத்தமாகக் கூறி, “அஸ்வத்தாமன் என்ற யானை” என்பதை மெதுவாகச் சொன்னார். மெதுவாகச் சொன்னது துரோணர் காதில் விழவில்லை. தன் மகன் இறந்துவிட்டான் என்பதாகப் புரிந்து கொண்டு, தன் ஆயுதத்தை கீழே போட்டார். எளிதில் எதிரணியால் வீழ்த்தப்பட்டார் துரோணர்.
போர் முடிந்ததும், துரோணரின் உயிரிழப்புக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்ற வருத்தத்தில் இருந்தார் தருமர். அந்த வருத்தத்தில் இருந்து விடுபட, தனது சகோதரர்களுடன் கேரள பகுதிக்கு வந்தார். இந்த இடத்தருகே வரும்போது இங்கிருந்த பெருமாள் கோயிலைப் புதுப்பித்து வழிபட்டார். சிற்றாற்றில் நீராடி பெருமாளை வழிபட்டதால் அவர் மன அமைதி அடைந்தார். இந்த தலத்தில் மற்றொரு சமயத்தில் தேவர்களுக்கும் பெருமாள் காட்சி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இமையவரப்பன்: சூரபத்மன் என்ற அரக்கன் சிவபெருமானை வழிபட்டு, அவரிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான். இதன் காரணமாக தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல இன்னல்களைக் கொடுத்து வந்தான். செய்வதறியாது தவித்த தேவர்கள், இதுகுறித்து சிவபெருமானிடம் முறையிட்டனர். வரம் கொடுத்துவிட்டு, பின்னர் தானே அசுரனை தண்டிக்க இயலாது என்று கூறிய சிவபெருமான், இதுதொடர்பாக திருமாலை சந்திக்கும்படி தேவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றுகூடி, திருமாலை நோக்கி தவம் இயற்றினர். இதில் மகிழ்ந்த திருமால், அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இமையவர்கள் என்று அழைக்கப்படும் தேவர்களுக்கு காட்சி அளித்ததால், பெருமாளுக்கு இமையவரப்பன் (தேவர்களின் தந்தை) என்ற திருநாமம் ஏற்பட்டது.
கோயில் அமைப்பும் சிறப்பும்
ஜகஜ்ஜோதி விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் இமையவரப்பன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருச்செங்குன்றூர் என்ற இடத்தை கண்ணகி அடைந்ததாக சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரன், பத்மன் என்ற இருவர் சிவபெருமானிடம் வரம் பெற்று, ஓர் உடலாக சூரபத்மன் என்ற பெயர் பூண்டு, தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் இன்னல் கொடுத்து வந்தனர். சுப்பிரமணியர் சூரபத்மனை சம்ஹாரம் செய்து, அவர்களை கொடியில் சேவலாகவும் மயிலாகவும் ஆக்கிக் கொண்டார் என்பது வரலாறு.
திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி உற்சவம், திருவோணத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையாக இருக்கும் அனைத்து விளக்குகளுக்கும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினால், இத்தல பெருமாள் உடனே மன்னித்து அருள்வார் என்பது ஐதீகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT