Published : 15 Dec 2016 10:46 AM
Last Updated : 15 Dec 2016 10:46 AM
பாசமும் பக்தியும் இரண்டறக் கலந்தவை. திருமதி ஒய்.ஜி.பி.யின் 91-வது பிறந்த நாளையொட்டி சென்னை, பாரத் கலாச்சாரில் நடந்த கலை விழாவில் கண்கூடாக பார்க்க முடிந்தது.
பக்திப் பரவசத்தை அளித்த பாட்டு
கர்னாடக இசை உலகில் வளர்ந்து வரும் இளம் கலைஞரான நிகில் சங்கர் தன்னுடைய நிகழ்ச்சியின் முதல் பாடலையே சரஸ்வதிக்கு அர்ப்பணித்தார். `மா மாவது ஸ்ரீ சரஸ்வதி’ எனும் கீர்த்தனை ஒரு பள்ளி வளாகத்திலேயே உள்ள அரங்கில் ஒலித்தது பரவசப்படுத்தியது. `மாமாவு கருணையா’ என்னும் சுவாதி திருநாளின் உருக்கமான சாகித்யத்தை விரிவாகப் பாடினார் நிகில். சாகித்யத்தின் மொழியைக் கடந்து அவரின் குரலே மென் சோகத்தையும், மகிழ்ச்சியையும், தெய்வத்தை மட்டுமே நம்பும் பக்தனின் கையறு நிலையையும் மிகவும் அழுத்தமாக பார்ப்பவர்களுக்குக் கடத்தியது. தில்லைஸ்தானம் சூரியநாராயணன் (மிருதங்கம்), வில்லிவாக்கம் ரகுராமன் (வயலின்) ஆகியோர் நிகிலின் பக்திமயமான இசைக்குப் பக்கபலமாக இருந்தனர்.
மழை வேண்டி ஒரு தில்லானா
சிறந்த குருவை பெற்றிருந்தால் மட்டும் போதாது. அந்தக் குருவின் பெயரைக் காப்பாற்றும் பொறுப்பும் ஒரு சீடருக்கு உண்டு. இந்த அடிப்படையில், தனது நாட்டிய குரு அலர்மேல்வள்ளியின் பெயரைத் தனது அபாரமான நடனத் திறமையின் மூலமாக நிலை நாட்டினார் மீனாட்சி ஸ்ரீ நிவாஸன். தெய்வாம்சத்துடன் பல காட்சிகளை தரிசனப்படுத்திய மீனாட்சி, குசேலன்-கிருஷ்ணன் நட்பை விளக்கும் நாட்டிய உருப்படியையும் வழங்கினார்.
மனைவியின் வறுபுறுத்தலால் கிருஷ்ணனைச் சந்திக்கச் செல்லும் குசேலரையும் அவர் எடுத்துச் செல்லும் அவலை தேவாமிர்தமாக கிருஷ்ணன் சாப்பிடும் சம்பவங்களையும், நண்பர்கள் கட்டித் தழுவி மகிழ்வதையும், கிருஷ்ணனின் மகிமையால் குசேலரின் வறுமை மறைந்து, அவரின் குடிசை வீடு, மாளிகை ஆவதை எல்லாம் நம் கண்முன் கொண்டுவந்தார் மீனாட்சி. இதைத் தொடர்ந்து இந்தப் புராணக் கதையில் தன்னுடைய கற்பனையையும் சேர்த்தார்.
ஒருவேளை, கிருஷ்ணனால் குசேலனின் வறுமை தீராமல் இருந்திருந்தால், மாடமாளிகைகள் எல்லாம் இல்லாமல், குடிசையிலேயே இருந்திருக்க நேர்ந்தால் குசேலனின் மனநிலை எப்படி இருக்கும்? இதுதான் மீனாட்சியின் கற்பனை. எதுவுமே இல்லை என்றாலும் உண்மையான பக்தனின் மனதிலிருந்து இறைவன் நீங்குவதில்லை என்பதைக் குசேலனின் மூலமாக வெளிப்படுத்தினார் மீனாட்சி.
திருக்குறள்களைக் கொண்டே ராஜ்குமார் பாரதி அமைத்திருந்த தில்லானாவுக்கு மீனாட்சி ஆடியது நிறைவாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT