Published : 19 Nov 2022 06:31 AM
Last Updated : 19 Nov 2022 06:31 AM
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகும். ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கொடிமரமும். பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமால் என்னுள்ளம் என்னும்
புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
(1115 பெரிய திருமொழி 2-7-8)
மூலவர்: விஜயராகவப் பெருமாள்,
தாயார்: மரகதவல்லி
தலவிருட்சம்: பாதிரி
தீர்த்தம்: ஜடாயு புஷ்கரிணி
விமானம் : விஜய வீர கோட்டி விமானம்
சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றபோது ராவணனுடன் போராடி தன் சிறகுகளை இழந்த கழுகு அரசரான ஜடாயு இந்த இடத்தில் வீழ்ந்து கிடந்தார். அப்போது ராமபிரான் ஜடாயுவைப் பார்க்க நேரிட்டது. ராமபிரானிடம் எல்லா விபரங்களையும் சொல்லி உயிர் நீத்த ஜடாயு, ராமபிரான் கையாலேயே அந்திமக் கடன் செய்கின்ற பாக்கியத்தை அடைந்தார். இதனால் ஜடாயுவுக்கு மோட்சம் கிடைத்தது. அதனால்தான் இந்த தலத்துக்கு திருப்புட்குழி என்ற பெயர் கிடைத்தது. (திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல்)
ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகள் செய்யும்போது ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவி தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. எனவேதான் இங்கு மட்டும் தாயார் சந்நிதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சந்நிதி பெருமாளுக்கு வலது புறமும் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜடாயுவுக்கென்று ராமபிரான் ஏற்படுத்திய தீர்த்தம்தான் கோயிலுக்கு எதிரே உள்ளது. மூலவர் தமது தொடையில் ஜடாயுவை வைத்துக் கொண்டிருக்க திருமகளும் பூமிதேவியும் காட்சி கொடுக்கின்றனர். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதையும் உண்டு. இங்கு ஜடாயுவுக்கென்று தனி சந்நிதி உண்டு.
விஜய வீர கோட்டி விமானத்தின்கீழ் மூலவர் விஜயராகவப் பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.
தாயார் தனி சந்நிதியில் மரகதவல்லியாக கொலுவிருக்கிறாள். பச்சை மேனியளாக தாயார் வீற்றிருப்பதில் இன்னொரு நயமும் உள்ளது. அதுதான் வறுத்த பச்சைப் பயிறை முளைக்க வைக்கும் அதிசயம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் வறுத்த பயிறை மடியில் கட்டிக் கொண்டு சந்நிதியில் படுக்க மறுநாள் காலையில் அப்பயிறு முளைத்திருந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு. மூதாதையருக்குச் செய்ய வேண்டிய கடன் ஏதாவது பாக்கியிருந்தால் அதை இத்தலத்தில் செய்யலாம்.
ராமானுஜரின் குருவான யாதவப்பிரகாசர் இங்குதான் வசித்தார். இவரிடம்தான் ராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். ராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. ராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோயிலில் உள்ளது. ராமானுஜர் மட்டுமல்லாமல் எம்பாரும் இங்கே பயின்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
இக்கோயிலில் அதிக அளவுக்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்துக்கு ஆற்றிய தொண்டைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
கோயிலினுள் வலது பக்கம் சக்கரத்தாழ்வார் தனிசந்நிதியில் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு எதிரே இன்னொரு கருடன். சம்பிரதாய அமைப்பாக மூலவருக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் ஹோம குண்டம் உள்ளது. இந்த இடத்தில்தான் பெருமாள் சாட்சியாக அனைத்து ஹோமங்களும் யாகங்களும் நடைபெறும்.
இங்குள்ள கல் குதிரை வாகனம் உண்மையான குதிரையைப் போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டது. தலை தனியாக மேலும் கீழும் அசைய, வால் அதற்கேற்றாற்போல இங்குமங்கும் அலைய, கால்கள் இயல்பான குதிரைபோல அடியெடுத்து வைக்க, பார்ப்போர் அப்படியே பிரமித்துப் போவது வழக்கம். இதை உருவாக்கிய சிற்பியால் அதற்கு உயிர் மட்டும்தான் கொடுக்க முடியவில்லை.
இதே போன்று இன்னொரு சிலை வடித்துத் தருமாறு வந்த ஏராளமான கோரிக்கைகளை புறக்கணித்தது, இச்சிலையை வடித்த சிற்பியின் தனிச்சிறப்பு. இது ஒன்றுதான். இதுவும் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு மட்டும்தான் என்று மிகவும் உறுதியாக இருந்தார் அந்தச் சிற்பி.
இந்த நன்றிக் கடனை பெருமாள் ஒவ்வொரு வருடமும் தீர்க்கிறார். பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் உற்சவத்தின்போது, அதே ஊரில் சிற்பி வசித்த தெருவுக்குப் போய், அவர் வாழ்ந்த வீட்டின் முன் நின்று, அவர் அமானுஷ்யமாகத் தன்னை தரிசிக்கும் வாய்ப்பைத் தருகிறார்.
தை அமாவாசை தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், சுவாமி புறப்பாடு நடைபெறும்.
கருவறை வாசலில் மேலே நிறைய மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன. பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர், பெருமாளை நினைத்து மணி கட்டி வேண்டுவர்.
குடும்பப் பிரச்சினை, தாம்பத்ய பிரச்சினை, சொத்து சுகம் சம்பந்தமான பிரச்சினை தீர்வதற்கும்,கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தால் அந்தப் பிரச்சினை சாதகமாக மாறி பாக்கியம் பெறுவதற்கும் இத்தலம் வேண்டிய வாய்ப்பை உருவாக்கும்.
அமைவிடம்: காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் பாதையில் வட மேற்கில் 10 கிமீ தொலைவில் உள்ள பாலுச்செட்டி சத்திரம் என்னும் ஊரில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT