Published : 23 Nov 2016 04:58 PM
Last Updated : 23 Nov 2016 04:58 PM
தலவிருட்சமே தலத்தின் அதிபதியாக இருக்கும் திருக்கோயிலைத் தெரியுமா? கோபுரம், விமானம், கொடிமரம் போன்ற கோயில்களின் வழக்கமான அங்கங்கள் இங்கே கிடையாது. தினமும் ஆறுகால பூஜைகள் கிடையாது. வாரம் ஒருமுறை சோமவாரத்தில் (திங்கள் கிழமை) இரவு 10.30 மணிக்கு நடைதிறந்து நந்தி தேவருக்கும் பரிவார மூர்த்திகளான வீரசக்தி விநாயகர், பெத்த பெருமாள் ஆகியோருக்கும் பூஜை நடைபெறும். பின்னர் மூலஸ்தானத்துக்கு பூஜை நடக்கும். இங்கு தைப்பொங்கல் நாளில் மட்டும் பகலில் கோயில் திறக்கப்படும்.
முதல் பொங்கல் கோயிலில் வைத்தவுடன் ஊர் முழுவதும் பொங்கல் வைக்கப்படும். இவ்வளவு தனித்துவம் வாய்ந்த கோயில் எது தெரியுமா? தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருஆவுடையார் கோயில்தான் அது. பட்டுக்கோட்டை தாலுகாவில் பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் பரக்கலக்கோட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
கண் திறந்த கடவுள்
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் பட்டுவனாச்சி ஆற்றங்கரையில் இருந்த அந்தக் கிராமத்தில் கூடை முடையும் குடும்பம் ஒன்று இருந்தது. அருகில் இருக்கும் வனத்துக்குள் சென்று அங்கு கிடைக்கும் விளைபொருட்களைக் கொண்டுவந்து விற்று வாழ்க்கை நடத்தினர். ஒருநாள் கூடை பின்னுவதற்காக மூங்கில் வெட்டிவர கணவன் சென்றான். காட்டிலிருந்த வெள்ளால மரத்தடியில் விளைந்திருந்த பிரம்பையும் மூங்கிலையும் கழித்தபோது, வாள் பட்டு மரத்தடியில் இருந்து ரத்தம் பீறிட்டுவர அதிர்ந்தான். பார்வை மங்கி ஒளி இழந்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இரவாகியும் கணவன் வீடு திரும்பாததால் ஊராருடன் காட்டுக்குள் தீப்பந்தம் ஏந்தி தேடிச் சென்றாள் மனைவி.
அங்கு பீறிட்டு ஓடிய ரத்தத்தையும் கண் தெரியாமல் இருந்த கணவனையும் கண்டு திகைத்து நிற்க, ஒருவர் மீது அருள் வந்தது. ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரண்டாம் சாமத்தில் சபாநாயகர் அந்த மரத்தடியில் வந்து அருள் புரிவதாகவும், அவர் நிற்கும் மரம் வெட்டப்பட்ட்தால் வெட்டியவனுக்குக் கண் போயிற்று என்று சொன்னார். தெய்வ குற்றம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு பரிகாரம் செய்ய, ரத்தம் வடிவது நின்றது. அவனுக்குக் கண் பார்வையும் கிடைத்தது. அப்படி பக்தர்களால் கண்டடையப்பட்டதுதான் இத்திருக்கோயில்
வான்கோபரும் மஹாகோபரும்
தவமுனிவர்கள் பலருள் தவறு நடப்பதைக் கண்டு வானளவு கோபம்கொள்பவர் வான்கோபர். அதே போல் அளவிட முடியாத அளவுக்குக் கோபம்கொள்பவர் மஹாகோபர். பரம்பொருளாகிய இறைவனை அடைய இல்லறமே சிறந்தது என வான்கோபரும் துறவறமே சிறந்தது என மஹாகோபரும் பிடிவாதமாக நிற்பவர்கள். தங்கள் கொள்கையில் எது சிறந்தது என அறிய பல மன்றங்கள் ஏறியும் முடிவு கிட்டாமல் இந்திரனிடம் சென்றனர். எவரின் வாதத்தை ஏற்றாலும் மற்றவர் சினத்துக்கு ஆளாவேம் என உணர்ந்து அவர்களை நடராசப் பெருமானிடம் அனுப்பிவைத்தார்.
புளிய மர தத்துவம்
இருவரும் தில்லைக்கூத்தனிடம் சென்று தங்களின் வாதங்களைக் கூற, அவர்களை பட்டுவனாச்சி நதிக்கரை செல்லும்படி சொன்னார். “அங்கே உறங்கும்புளி, உறங்காப்புளி என இரு புளிய மரங்கள் உள்ளன. அங்கு சென்று தவம் செய்தால் உண்மை விளங்கும். தவறினால் கார்த்திகை சோமவாரம் தில்லையில் அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு யாம் அங்கு வந்து உண்மை விளக்குவோம்” என நடராசன் கூறினார். அதன்படி இருவரும் வந்து இரு புளிய மரங்களின் அடியில் அமர்ந்து மோனத்தவம் செய்யத் தொடங்கினார்கள்.
புளி, காய் நிலையில் ஓட்டோடு ஒட்டிக்கொண்டு கனமாக இருக்கும். பழுக்கும் போது ஓடும் சதையும் தனித்தனியாக நிற்கும். இல்லறமாயினும் துறவறமாயினும் பற்றற்ற ஆன்மா தன் உயர்விற்கு இந்த உடலாகிய கூட்டைப் பயன்படுத்திக் கொண்டு பரம்பொருளை அடையும் என்ற தத்துவத்தை உணர்வர் என்பதற்காகத்தான் புளியமரத்தடியில் தவம் இருந்து உணரச் சொன்னார். கோபக் குன்றில் நிற்கும் இருவரும் அதை உணராமல் தவத்தைத் தொடரந்து கொண்டிருந்தனர்.
சமாதானம் சமாதானம்
கார்த்திகை சோமவாரத்தன்று முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தன் படை, பரிவாரங்களுடன் பொய்கைநல்லூர் சென்றார் நடராசன். வெள்ளால மரத்தடியில் தடம்பதித்து இருவரது மன மாசை புளியால் அகற்றி உலக இயற்கையை தெளியவைத்தார். பிறகு இருவரையும் சமாதானம் செய்து மத்யஸ்தம் செய்து வைத்தார். அதனால் இந்த இடம் மத்யபுரி எனவும் இங்கு வந்து நின்ற ஈசன் மத்யபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
எங்கும் வியாபித்திருக்கும் ஈசன் திருவடி பதித்த இடம் ஒரு பீடமாகக் கருதப்பட்டு உலகம் முழுமைக்கும் ஆன ஆவுடையாராக அந்த இடத்தைக் கருதி, அங்கு நின்ற மரத்தையும் சிவலிங்கமாகக் கொண்டு பொதுஆவுடையார் திருக்கோயில் என அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
மரமே தெய்வம்
கருவறையில் தலமரமான வெள்ளால மரமே தெய்வம். அதைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ள பரப்பே கருவறை. ஆலமரத்தின் அடியில் சந்தனக் கலவை பூசி அதன்மேல் வெள்ளியில் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம், திருக்கண்கள், திருநாசி, திருவாய் முதலியவை பதிக்கப்பட்டுள்ளன. முன்புறம் பிரபை நிறுத்தியவுடன் சிவலிங்க வடிவம் தெரியும்.
எதிர் மேடையில் வெள்ளால மரத்தினடியில் வந்து நின்ற இறைவனின் திருவடிகள் பதிக்கப்பட்டுள்ளன. அதன் முன்பு பித்தளைத் தகட்டினால் தோரணவாயில் அமைக்கப்பட்டு மரத்தின் முழு உருவமும் தெரியாதவாறு வெள்ளைத் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது.. முன்புறம் முன் மண்டபமும் மகாமண்டபமும் அமைந்துள்ளன.
சோமவாரங்கள் சிறப்பானவை. கார்த்திகை சோமவாரங்களில் மூன்று, நான்காவது சோமவாரங்கள் தனிச் சிறப்பு பெற்றவை. கார்த்திகை சோமவாரத்தில் மட்டும் மக்கள் இந்தக் கோயில் உண்டியலில் காணிக்கை தவிர மூட்டைக் கணக்கில் நெல், நவதானியங்கள், பழங்கள், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள், கால்நடைகள் ஆகியவற்றைக் காணிக்கையாகத் தந்துவிட்டுச் செல்லும் பழக்கமுண்டு. திருநீறுடன் வெள்ளாலமரத்தின் கீழே உதிர்ந்த இலையையும் வீட்டுக்கு எடுத்துச்சென்று வழிபடுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT