Published : 16 Nov 2022 08:32 PM
Last Updated : 16 Nov 2022 08:32 PM

சபரிமலை செல்லும் ‘சாமி’கள் கவனத்துக்கு... ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? - முழு விவரம்

சன்னிதானம் அருகே காத்திருக்கும் பக்தர்கள் | கோப்புப்படம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பனின் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் லட்சோப லட்ச பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, அய்யப்பனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு ஆலயம் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

கோயிலின் புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். வரும் டிசம்பர் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. அதன் பின்னர் கோயில் நடை அடைக்கப்படுகிறது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காரணத்தால் வழக்கம் போலவே பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு கடந்த சில ஆண்டுகளாக கூட்ட நெரிசலை தவிர்க்க உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை கேரள போலீசாரின் கிராவுட் கன்ட்ரோலிங் உத்தி எனவும் சொல்லலாம்.

சபரிமலை கோயில் அய்யப்ப சாமி தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? - இதோ வழிமுறைகள்

  • பக்தர்கள் sabarimalaonline.org என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் புதிதாக பயன்படுத்துபவர்கள் ‘ரிஜிஸ்டர்’ எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் புகைப்படம், பெயர், விலாசம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
  • தொடர்ந்து பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும்.
  • பின்னர் மீண்டும் அந்த தளத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி லாக்-இன் செய்ய வேண்டும்.
  • அதில் பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • தனிநபரகவும், அதிகபட்சம் 5 பேர் அடங்கிய குழுவாகவும் இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம்.
  • குழுவாக புக் செய்யும் போது ‘Add Pilgrim’ எனும் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். அதில் அந்த புதிய பக்தரின் புகைப்படம், பெயர், விலாசம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அனைத்தையும் முடித்த பிறகு தேதி, நேரம் போன்றவற்றை உறுதி செய்யும்படி சொல்லும். அதை செய்தால் பதிவு செய்யப்பட்ட பக்தரின் மின்னஞ்சல் முகவரிக்கு தரிசன விவரம் அடங்கிய VirtrualQ கூப்பன் புகைப்படத்துடன் வரும்.
  • அதை பக்தர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • யாத்திரை செல்லும் போது பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு செல்லலாம்.
  • பக்தரின் விருப்பபடி தரிசன தேதி மற்றும் நேரம் கிடைக்கும் என்றால் வலைதளத்தில் அந்த குறிப்பிட்ட தேதி பச்சை நிறத்தில் இருக்கும். இல்லையெனில் அது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  • இந்த தளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை எனில் நிலக்கல் பகுதியில் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
  • இந்த முன்பதிவுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இதனை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x