Last Updated : 17 Jul, 2014 01:27 PM

 

Published : 17 Jul 2014 01:27 PM
Last Updated : 17 Jul 2014 01:27 PM

பேய்க்கரும்பைச் சுவைத்த பட்டினத்தார்

ஒரு சமயம் சிவபெருமான் உமையம்மையோடு பூலோகம் வரும்போது குபேரனும் அவர்களுடன் வந்துள்ளார். ஒவ்வொரு தலமாக அவர்கள் பார்த்துக் கொண்டு வரும்பொழுது காவிரி கடலோடு கலக்கும் காவிரிப்பூம்பட்டின அழகில் குபேரன் மெய் மறந்து நின்று ரசித்தானாம், அதனைக் கண்ட சிவபெருமான் ‘குபேரா நீ இந்த மண்ணில் மிகுந்த பற்று கொண்டதால் இங்கேயே பிறந்து, வாழ்ந்து பிறகு கைலாயம் வருக’ என்று கூறிவிட்டார். சிவன் அருளால் குபேரன் காவிரிப்பூம்பட்டினத்தில் பட்டினத்தாராக அவதரித்தார்.

இல்லற வாழ்வில் பட்டினத்தாருக்குக் குழந்தை இல்லை என்ற குறை அவரை வருத்தியது. திருவிடைமருதுர் மகாலிங்கப் பெருமான் அருளால் குழந்தைப் பேறு கிட்டியது. மருதவாணர் எனப் பெயரிட்டு அக்குழந்தையை வளர்த்தார். இளமைப் பருவத்தில் மருதவாணர் கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டினான். ஒருமுறை பொருள் வருவாய் குறைந்ததால் தன் மகன் மீது சினம் கொண்டார் தந்தை. இதனால் மருதவாணர் ஒரு பேழையினைத் தாயிடம் தந்துவிட்டு வெளியே சென்றார். அடிகள் அப் பேழையை வாங்கினார். அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்ற வாசகம் எழுதப்பட்டி ருந்தது. அதனைப் படித்த அடிகளுக்குப் பொருளாசை அறுபட்டது. அன்று முதல் அவருக்குப் பட்டினத்தார் என்ற பெயர் ஏற்பட்டது.

பட்டினத்தார் திருத்தலங்கள்தோறும் சென்று இறைவனை மனமுருகிப் பாடினார். இவர் படைப்புகளுள் சிறப்பிடம் பெறுவது திருவிடைமருதுர் மும்மணிக்கோவை. இவரது பாடல்களில் மனித வாழ்விற்கு உரிய மேன்மையான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மனித உடல் நிலையில்லாதது. ஆகவே அனைவருக்கும் நன்மையைச் செய்ய வேண்டும் என்கிறார்.

‘இருப்பது பொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே ...’

நிலையாமையை உலகோர்க்கு உணர்த்திய பட்டினத்தார் திருவொற்றியூர் சென்றார். அங்கு இறைவன் தந்த பேய்க் கரும்பைச் சுவைத்தார். அது இனித்தது. அங்கு அடிகள் சிவலிங்கமாகத் தோன்றினார். இது நிகழ்ந்த நாள் ஆடி உத்திராடம். இந்த நாள் ஆண்டுதோறும் பட்டினத்தார் சந்நிதிகளில் குருபூசையாகக் கொண்டாடப்படுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) நகரத்தார்களால் ஆடி உத்திராடத்தை முன்னிட்டு 12 நாட்கள் பல்லவனீஸ்வரம் ஆலயத்திலும், நகர விடுதிகளிலும் பட்டினத்தார் விழா சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x