Published : 10 Nov 2022 06:51 AM
Last Updated : 10 Nov 2022 06:51 AM
108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருக்கள்வனூர் கள்வப் பெருமாள் கோயில் 54-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)
(இரண்டாம் ஆயிரம் - 2058 திருநெடுந்தாண்டகம்)
மூலவர்: கள்வப் பெருமாள் (ஆதிவராகர்)
தாயார்: சவுந்தர்ய லட்சுமி
தீர்த்தம்: நித்ய புஷ்கரிணி
ஆகமம்: வைதீக ஆகமம்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் குளக்கரையில் வடகிழக்குப் பகுதியில் மூன்று அடுக்குகளில் நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற நிலையில் உள்ள திவ்ய தேசம். பெருமாள் காமாட்சியம்மன் சந்நிதியில் நேராக தோன்றாது மறைந்து நின்றமையால் இப்பெயர் உண்டாயிற்று.
மூலவர் ஆதி வராஹப் பெருமாள். நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். காமக்கோட்டத்தின் பஞ்ச தீர்த்தத்தின் கரையில் லட்சுமி பார்வதியுடன் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்ததை பெருமாள் ஒளிந்திருந்து கேட்டதால் பெருமாளுக்கு பார்வதிதேவி ‘கள்வன்’ என்று பெயர் சூட்டினார்.
முன்பொரு சமயம் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது சிவபெருமான் கோபத்தில் பார்வதிதேவியை சபித்து விட்டார். பார்வதிதேவி சிவனடி பணிந்து அதற்கு பிராயச்சித்தம் கேட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்து ஒற்றை காலால் நின்று வாமனரை நோக்கி தவம் செய்தால்தான் இந்த சாபம் நீங்கும் என்று சிவபெருமான் கூறினார். பார்வதி தேவியும் காஞ்சிபுரம் வந்து வாமனரை நோக்கி தவம் செய்து காமாட்சி என்று பெயர் பெற்று சிவபெருமானுடன் இணைந்ததாகக் கூறப்படுகிறது.
“எங்கிருந்தால் என்ன, எப்படி தரிசித்தால்தான் என்ன, பிம்பமாய் கண்டால்தான் என்ன, என் பார்வை உலகளாவிச் செல்கிறது. எல்லா திக்குகளிலும் பாய்கிறது. முன் – பின், அக்கம் – பக்கம், மேல் – கீழ் என்று திசைகளைக் கடந்து செல்கிறது. அந்தப் பார்வைக்குள் என்னை விரும்பி தரிசிப்பவர்கள், இயலாமையால், பூடகமாக தரிசிப்பவர்கள், தரிசிக்கவே விரும்பாதவர்கள் என்று எல்லோரையுமே நான் பார்க்கிறேன். அவர்களை உய்விக்கிறேன். துயர் தீர்க்கிறேன். மன நிம்மதி தருகிறேன்” என்று தன் கள்ளச் சிரிப்பால் பகவான் விளக்குகிறார்.
சோரபுரம் என்ற திருக்கள்வனூர் என்ற இந்த திவ்ய தேசத்தில் அருளும் ஆதிவராகப் பெருமாளே… நமஸ்காரம். அஞ்சிலை நாச்சியாருடன் வாமன விமான நிழலில், நித்ய புஷ்கரணிக் கரையில் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தரும் பெருமாளே… நமஸ்காரம். அசுவத்த நாராயண முனிவருக்கு நேரில் காட்சி கொடுத்தருளிய அதே கோலத்தில் எங்களுக்கும் சேவை சாதிக்கும் பெருமாளே… நமஸ்காரம் என்று ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம் கூறுகிறது.
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற, குடும்பத்தில் ஒற்றுமை தழைக்க, அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவப்பெயர் பெற்று அதில் இருந்து கிடைத்த மன உளைச்சல் நீங்க, ராகு கேது தோஷம் விலக, திருக்கள்வனூர் பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி உற்சவம், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT