Published : 04 Nov 2022 05:09 AM
Last Updated : 04 Nov 2022 05:09 AM

வரும் 8-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்

திருமலை: வரும் 8-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 12 மணி நேரம் நடை சாத்தப்பட உள்ளது.

சந்திர கிரகணம் வரும் 8-ம் தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 வரை நடைபெற உள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து திருப்பதி தேவஸ்தான கோயில்களும் அன்றைய தினம் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7.20 மணிக்கு திறக்கப்பட உள்ளது. அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8-ம் தேதி, ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான தரிசனம், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் போன்ற அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 8-ம் தேதி திருப்பதியில் சர்வ தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் திருமலைக்கு சென்று, அங்குள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 2-ன் வழியாக சர்வ தரிசன வரிசையில் சென்று மட்டுமே கோயில் நடை திறந்த பின்னர் சுவாமியை தரிசிக்க இயலும்.

இதுதவிர, கிரகணத்தின்போது சமைக்க மாட்டார்கள் என்பதால், அன்றைய தினம் திருமலையில் உள்ள இலவச அன்னதான மையத்தில் இலவச உணவு விநியோகமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருச்சானூர் பிரம்மோற்சவம்: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இதையொட்டி, தேவஸ்தான திருப்பதி இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் மற்ற அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும், பஞ்சமி தீர்த்த வெள்ளோட்டமும் நடைபெற்றது.

பின்னர் அதிகாரி வீரபிரம்மம் கூறும்போது, “தாயார் பிரம்மோற்சவம் வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் வாகன சேவை நடைபெறும். இறுதி நாளான 28-ம்தேதி, பஞ்சமி தீர்த்த புனித நீராடல் நடைபெற உள்ளது.

இதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் அன்றைய தினம் தாயாருக்கு திருமலையில் இருந்து சுவாமி சார்பில் வரும் சீர்வரிசை ஊர்வலத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x