Published : 29 Oct 2022 05:25 AM
Last Updated : 29 Oct 2022 05:25 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (அக்.30) நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகின்றன.
சூரசம்ஹாரம்: விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.30) மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
தொடர்ந்து, 31-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி–அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவமும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும்.
கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் வருகை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கனிமொழி எம்பி ஆய்வு: இந்நிலையில், திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்துக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கனிமொழி எம்பி நேற்று ஆய்வு செய்தார். கோயில் வளாகத்தில் விரதமிருக்க அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்கள், அன்னதானக் கூடத்தை பார்வையிட்டு, அங்கு தங்கியுள்ள பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் நேற்று திருச்செந்தூரில் ஆய்வு மேற்கொண்டார். எஸ்பி.க்கள் தூத்துக்குடி பாலாஜி சரவணன், திருநெல்வேலி சரவணன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment