Published : 29 Oct 2022 06:02 AM
Last Updated : 29 Oct 2022 06:02 AM
திருமலை: நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல், திருப்பதியில் மீண்டும் சர்வ தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று தெரிவித்தார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் திருப்பதியில் 3 இடங்களில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டோக்கன்களை சில காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தியது. பின்னர், டோக்கன்கள் வழங்கப்படும் இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சில அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதையடுத்து, மீண்டும் டோக்கன் வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு அனுமதி வழங்கியது. ஆகையால், நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், நிவாசம் தங்கும் விடுதி மற்றும் ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜ சுவாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் சோதனை அடிப்படையில் பக்தர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் தினமும் 20 ஆயிரம் டோக்கன்கள் வீதமும், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தினமும் 15 ஆயிரம் டோக்கன்கள் வீதமும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பக்தர்களின் கூட்டத்தை பொறுத்து இதனை குறைக்கவோ அல்லது கூட்டவோ செய்யப்படும். ஒருவேளை இந்த சர்வ தரிசனடோக்கன்கள் தீர்ந்து விட்டால், பக்தர்கள் நேரடியாக திருமலையில் உள்ள வைகுண்டம் 2-வது காம்ப்ளக்ஸ் வழியாக சென்று சுவாமியை தர்ம தரிசனம் வாயிலாக தரிசிக்கலாம். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும்.
இதேபோன்று, வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தினமும் காலை 8 மணிக்கு விஐபி பிரேக் தரிசனம் சோதனை அடிப்படையில் அமல் படுத்தப்படும். இதன் மூலம் காலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் ரத்தி ரூ.1 கோடிக்கான காணிக்கை காசோலையை அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டியிடம் வழங்கினார்.
ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் பைக்: திருப்பதி அலிபிரி லிங்க் பஸ்நிலையத்தில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களின் பைக்குகளை நிறுத்த ரூ.54லட்சம் செலவில் கட்டப்பட்ட ‘பைக்ஸ்டாண்ட்’ டை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி திறந்து வைத்து பேசும்போது, "தேவஸ்தான ஊழியர்களில் பலர் தங்கள் பைக்குகளை பஸ்நிலையத்தில் வைத்து விட்டு பஸ்களில் திருமலைக்கு வந்து செல்கின்றனர். இதில் பலரது பைக்குகள்திருடுபோனதாக புகார்கள் வந்தன.இதனை தடுக்கவே பைக் ஸ்டாண்ட்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் காற்றில் மாசு கலப்பதை தடுக்கும் விதத்தில் ஊழியர்களுக்கு விரைவில் எலக்ட்ரிக் பைக்குகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT