Published : 03 Nov 2016 12:07 PM
Last Updated : 03 Nov 2016 12:07 PM

மணவாள மாமுனிகள் அவதார நாள்: விளம்பரம் விரும்பாத வேதாந்தி

குரு பரம்பரையில் கடைசி ஆச்சார்யன் என்று போற்றப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் சிக்கல் கிடாரம் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த திருநாவிரானுடைய பிரான் தாசரண்ணற்கும் ரங்க நாச்சியாருக்கும் திருக்குமாரராய் (கி.பி.1370) ஆழ்வார் திருநகரியில் ஐப்பசி திருமூலத் திருநாளில் அவதரித்தார். சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்த இவர், ஆழ்வார்களின் ஈரச் சொற்களாகிய திவ்ய பிரபந்தங்களுக்குரிய அர்த்த விசேஷங்களை காலட்சேபங்களாக உபதேசித்துவந்தார்.

இல்லறத்தைத் துறந்து, துறவறம் பூண்டு “மணவாள மாமுனிகள்” என்ற சிறப்பைப் பெற்ற இவர், சடகோப ஜீயர் சுவாமிகளிடம் சன்னியாசம் பெற்றார்.

திருவரங்கம் பெரிய கோயில் அரங்கனின் கைங்கர்யங்களில் முற்றிலுமாக ஈடுபட்ட இவர் வைணவத்தின் வளர்ச்சிக்காக நாடெங்கிலும் யாத்திரை செய்து நல்லார்களைச் சந்தித்து, பல திவ்ய தேசங்களயும் தரிசித்தார். இவரின் காலட்சேபம் செய்யும் முறையைக் கண்டு அரங்கனே இவரிடம் ஒரு வருட காலம் திருவாய்மொழிக்கான “ஈடு” முப்பத்தாறாயிரப்படியைக் காலட்சேபம் கேட்டாராம். மாமுனிகளையே தன்னுடைய ஆச்சார்யன் என்று சபையில் தானே தோன்றி அறிவித்தாராம். ஆச்சார்யனுக்குரிய தனிப் பாசுரத்தையும் சமர்ப்பித்து தன் பாம்பணையை இவருக்கு அளித்து கௌரவித்தார் என்பது ஐதீகம்.

அதனால்தான் திருத்தலங்களில் அமைந்துள்ள மாமுனிகளின் அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்கிரகங்கள் ஆதிசேஷனில் அமர்ந்தவாறு காட்சியளிப்பதை இன்றும் காணலாம். இவருக்குச் சன்னிதி கட்ட உத்தரவு கேட்டு இவருடைய சீடர்கள் இவரை வற்புறுத்தினார்கள். விளம்பரம் விரும்பாத இவ்வேதாந்தி, அவர்களின் அன்பைத் தட்ட முடியாமல் அதற்கு இணங்கினார். தாம் உபயோகித்துவந்த இரண்டு சிறிய அளவிலான செப்புச் சொம்புகளை அவர்களிடம் தந்து, அவற்றில் எது சிறியதாக உள்ளதோ அந்த அளவிற்குத் தம் அர்ச்சாவதாரத் திருமேனியை அமைக்கச் சொன்னார்.

அதன்படி சீடர்களும் இரண்டு விக்கிரகங்களை உருவாக்கி ஆழ்வார் திருநகரியான அவரின் அவதாரத் தலத்தில் அமைத்தார்கள். அரங்கனே சீடரான பாக்கியம் கொண்ட உபதேச முத்திரையுடன் கூடிய விக்கிரகத்தை ஸ்ரீரங்கத்தில் அமைத்தார்கள். மணவாள மாமுனிகளின் விக்கிரகங்களை இன்றும் பல திருக்கோயில்களில் காணலாம்.

மணவாள மாமுனிகள் அணிந்திருந்த தங்க மோதிரம் வானமாமலை மடத்தின் ஆராதனத்தில் இன்றும் உள்ளது. ஐப்பசித் திருமுலம் நன்னாளில் தற்கால ஜீயர் பட்டம் வகிக்கும் ஸ்வாமிகள் அம்மோதிரத்தை அணிந்துகொண்டு காட்சி தந்து பக்தர்களுக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் அருளுவார்.

இவரது அவதார நன்னாள், அனைத்து திருமால் திருத்தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x