Published : 25 Oct 2022 06:08 AM
Last Updated : 25 Oct 2022 06:08 AM
திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 38-வது திவ்ய தேசம், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில் ஆகும். மிகப் பெரிய பிரார்த்தனை தலமான இங்கு, பக்தர்கள் பலர் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் செய்து கொள்வர். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று.
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.
மூலவர்: அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்,
உற்சவர்: சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி,
தாயார்: அலர்மேல் மங்கை
தல விருட்சம்: வில்வம், பரசு,
தீர்த்தம்: வெள்ளக்குள தீர்த்தம்
துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட மகனுக்கு அவனுடைய ஒன்பதாவது வயதில் அகால மரணம் சம்பவிக்கும் என்று வசிஷ்ட முனிவர் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ந்த மன்னன், தன் மகனைக் காப்பாற்ற ஏதேனும் வழி உள்ளதா என்று வசிஷ்ட முனிவரிடம் கேட்டான். திருநாங்கூர் என்ற ஊருக்குச் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, அங்கு அருள்பாலிக்கும் சீனிவாசப் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் தகுந்த பலன் கிடைக்கும் என்று கூறினார்.
வசிஷ்ட முனிவர் கூறியபடி சுவேதன் குளத்துக்குச் சென்று அங்கு நீராடி, முனிவர் கூறிய நரசிம்ம மிருத்யுஞ்சய மந்திரத்தை, சீனிவாசப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்து கூறிவந்தான். சுவேதனின் தவத்தைக் கண்டு மகிழ்ந்த பெருமாள், “நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் அமர்ந்து 8,000 முரை இம்மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு யம பயம் கிடையாது” என்று அருளினார்.
இதனால் சுவேதன் சீரஞ்சீவித்துவம் பெற்றான். இத்தலம் வைணவத் தலங்களில் எம பயம் நீக்கும் திருத்தலம் ஆகும்.
திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று
இத்தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் தத்வத் யோதக விமானம் எனப்படும். ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர். மணவாள மாமுனிவருக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம் இதுவாகும்.
ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார், திருப்பதி பெருமாளையும், இத்தல பெருமாளையும் ‘அண்ணா’ என்று விளித்து பாடியுள்ளார். இதன் காரணமாக, இத்தல பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணனாகிறார். எனவே இங்குள்ள சீனிவாசப் பெருமாள், அண்ணன் பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார்.
திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும். ஒரு மங்கையால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.
இத்தலத்தில் உள்ள குளத்தில் குமுத மலர்கள் நிறைந்து காணப்படும். அம்மலர்களைப் பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வந்தவர்களுள் குமுதவல்லி என்பவள், மானிடனின் பார்வை பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதை அறிந்த படைத்தளபதி நீலன், குமுதவல்லியை மணக்க விரும்புகிறார். குமுதவல்லி விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றினார் நீலன்.
நிறைவாக வைணவ அடியார்களுக்கு அன்னம்பாலிக்கும் செயலில் ஈடுபடும்போது, பெருமாள் நீலனுக்கு காட்சி கொடுத்து ‘திரு’ மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். குமுதவல்லி நாச்சியாரும் இத்தலத்தில் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர்.
திருவிழாக்கள்
திருப்பதியைப்போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்சவம். வைகாசி முதல் ஐந்து தேதிகளில் வசந்த உற்சவம். ஆடிமாதம் கடைசி வெள்ளி திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன.
திருமணத் தடை நீங்கவும், யம பயம் நீங்கவும் இங்கு துலாபாரம் காணிக்கை கொடுப்பது வழக்கமாக உள்ளது.
அமைவிடம்: சீர்காழி - தரங்கம்பாடிச் சாலையில் சீர்காழியிலிருந்து சுமார் 8 கிமீ. தொலைவில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT