Published : 22 Oct 2022 06:03 AM
Last Updated : 22 Oct 2022 06:03 AM
108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருத்தெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள் கோயில் 36-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திவ்ய தேசங்களில் இத்தலத்துக்கு மட்டுமே அம்பலம் என்ற சொல் வழங்கப்படுகிறது.
திருநாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலம், திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களில் (பெரிய திருமொழி) மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்தென் செங்கண் மாலை
கூரணிந்த வேல்வலவன் ஆலிநாடன்
கொடிமாட மங்கையர்கோன் குறையலாளி
பாரணிந்த தொல்புகழோன் கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்
சீரணிந்த வுலகத்து மன்னராகிச்
சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே.
மூலவர்: செங்கண்மால், பள்ளி கொண்ட ரங்கநாதர்
உற்சவர்: லட்சுமி நாராயணன்
தாயார்: செங்கமல வல்லி (செண்பகவல்லி)
தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி
விமானம்: வேத விமானம்
தல வரலாறு
இரண்யாட்சன் என்ற அசுரன், பூமியை பாதாள உலகத்தில் மறைத்து வைத்தான். இதைக் கண்டு அஞ்சிய தேவர்கள், முனிவர்கள், இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டனர். திருமால் , பூமியை காப்பாற்றுவதற்காக, வராக அவதாரம் எடுக்க உள்ளதாக அவர்களிடம் கூறினார். இதைக் கேட்ட மகாலட்சுமியும் ஆதிசேஷனும், வராக அவதார காலத்தில் திருமாலை விட்டு எவ்விதம் பிரிந்து இருப்பது என்று கவலை கொண்டனர்.
திருமால் இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் பலாசவனம் சென்று அங்கு தவம் இருக்கவும். அங்கு சிவபெருமானும் வருவார். நான் அந்த சமயம் இரண்யாட்சனை வதம் செய்துவிட்டு அங்கு வருகிறேன். அப்போது அந்த இடம் ‘திருத்தெற்றியம்பலம்’ என்று அழைக்கப்படும். பாஷ்யகாரர் என்ற வைணவ பக்தர், தீட்சை பெற்ற 108 வைணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய உள்ளார். நான் அங்கேயே தங்கி நித்திய வாசம் செய்யவுள்ளேன்” என்றார்.
அதன்படி வராக அவதாரம் எடுத்த திருமால், பாதாள உலகுக்குச் சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டார். இதையறிந்த ஆதிசேஷனும், மகாலட்சுமியும் இத்தலம் வந்து தவம் இயற்றத் தொடங்கினர். முன்னர் கூறியபடி இத்தலத்துக்கு வந்த திருமால், ஆதிசேஷன், சிவபெருமான், மகாலட்சுமி மூவருக்கும் அருள்பாலித்தார். போர் புரிந்த களைப்பில் சிவந்த கண்களுடன் இருந்த திருமால், அவ்வண்ணமே இத்தலத்தில் பள்ளி கொண்டார். அதனால் இத்தல பெருமாள் ‘செங்கண்மால் ரங்கநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில் இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கியதற்குச் சமம்.
கோயில் அமைப்பும், சிறப்பும்
வேத விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில் கிழக்கு பார்த்து ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட கோலத்தில் மூலவர் அருள்பாலிக்கிறார். தலையையும், வலது கையையும் மரக்கால் மேல் கைத்துக் கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து, தொங்கவிட்டபடி காட்சி அளிக்கிறார். மூலவரின் தலைப்பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் அமர்ந்துள்ளனர். உடன் லட்சுமி நாராயணர், சக்கரத்தாழ்வார், சந்தானகோபால கிருஷ்ணர் அருள்பாலிக்கின்றனர்.
செங்கமலவல்லி தாயார் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார், மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி 12 ஆழ்வார்கள், அனுமன் அருள்பாலிக்கின்றனர். மணவாள மாமுனிகள் இத்தலம் வந்து தரிசித்துள்ளார்.
சூரியனுக்கு சாப விமோசனம்
ஒருசமயம், ஒரு சாபத்தால் சூரியனின் பிரகாசமும் வலிமையும் குறையத் தொடங்கியது. தனது பிரகாசத்தையும் வலிமையையும் மீட்பது தொடர்பாக மிகவும் கவலை கொண்ட சூரியன், ஓர் அசரீரி வாயிலாக, திருத்தெற்றியம்பலம் பற்றியும் இங்குள்ள புஷ்கரிணி பற்றியும் அறிந்து கொண்டார். உடனே இத்தலத்துக்கு வந்து புஷ்கரிணியில் நீராடி சுவாமி தரிசனம் செய்து, சாபம் நீங்கப் பெற்றார். பழையபடி அவரது பிரகாசமும், வலிமையும் கிடைத்தன. சூரியன் நீராடிய புஷ்கரிணி, சூரிய புஷ்கரிணி என்று அழைக்கப்படுகிறது. இவரைப் போலவே ஆனந்தாழ்வார் என்ற பக்தரும், இத்தலத்துக்கு வந்து சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
செல்வாக்கு குறைந்தவர்கள், உயர் பதவி பெற விரும்புபவர்கள், புகழ், பெருமையை தலைமுறை தலைமுறையாகக் காக்க விரும்புபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் வந்து ஒருநாள் தங்கியிருந்து வழிபாடு செய்து, அனைத்து பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி, தை மாத கருடசேவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT