Published : 18 Oct 2022 06:17 AM
Last Updated : 18 Oct 2022 06:17 AM
108 வைணவ திவ்ய தேச தலங்களில் மயிலாடுதுறை மாவட்டம் திருசெம்பொன் செய் கோயில் 31-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பிறப்பொடு மூப்பொன்றில்லவன் றன்னைப்
பேதியா வின்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக் கழிவு மானானை
ஏழிசையில் சுவை தன்னை
சிறப்புடை மறையோர் நாங்கை, நன்னடுவுள்
செம்பொன் செய், கோயிலுளுள்ளே
மறைப்பெரும் பொருளை, வானவர் கோனை
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
மூலவர் : பேரருளாளன்
உற்சவர் : செம்பொன்னரங்கன், ஹேரம்பர்
தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்
தீர்த்தம் : நித்ய புஷ்கரிணி, கனக தீர்த்தம்
ஆகமம் / பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்
விமானம் : கனக விமானம்
தல வரலாறு
ராவணனுடன் யுத்தம் முடிந்தபின், ராமபிரான் அயோத்தி திரும்புகிறார். அந்த சமயத்தில் இத்தலத்தில் அமைந்துள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனைக் கொன்றதால், ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது, அதுகுறித்து த்ருடநேத்ர முனிவரிடம் ஆலோசனை நடத்தினார். முனிவரும் ராமபிரானுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்.
அதன்படி தங்கத்தால் பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்யப்பட்டது. அந்த பசுவுக்குள் 4 நாட்கள் அமர்ந்து ராமபிரான் தவம் மேற்கொண்டார். ஐந்தாம் நாள் அந்த சிலை, ஓர் அந்தணருக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் ராமபிரானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அந்த அந்தணர், பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால், ‘செம்பொன் செய் கோயில்’ என்ற பெயர் கிட்டியது.
கோயிலின் அமைப்பும், சிறப்பும்
கனக விமானத்தின் கீழ் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் பெருமாள், தன் கோயிலை தானே கட்ட உதவிபுரிந்துள்ளார். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால், ‘அருளாளர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் எப்போதும் பக்தர்களைக் காத்து அவர்களுடனேயே இருப்பதால் ‘பேரருளாளர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் அல்லிமாமலர் நாச்சியார், பூதேவியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் வறுமையில் வாடிய காசியப்பன் என்ற அந்தணர், இத்தலத்துக்கு வந்து 3 நாட்களில் 32,000 முறை ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபட்டதால், அனைத்து செல்வங்களையும் அவருக்கு பெருமாள் அருளினார்.
கருட சேவை
பிரும்மஹத்தி தோஷத்தில் இருந்து சிவபெருமான் விடுபட, ‘ஏகாதச ருத்ர’ அச்வமேத யாகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி யாகத்தின் பூர்ணாஹூதி சமயத்தில் திருமால் எழுந்தருளி, சிவபெருமானுக்கு சேவை சாதித்தார். ருத்ரனின் பிரார்த்தனைப்படி திருமால் 11 ரூபங்களில் அவருடன் நித்ய வாசம் செய்துகொண்டு அருள்பாலிக்கிறார். இதை முன்னிட்டு தை மாத அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்ய தேச எம்பெருமான்கள் திருமணிக்கூடத்தில் இருந்து தொடங்கி 11 கருட வாகனத்தில் எழுந்தருள்வது வழக்கம். திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களும், ருத்ரன் பூஜிப்பதற்காக ஏற்பட்டவை.
திருவிழாக்கள்
ஐப்பசி சுவாதி (பெருமாள் நட்சத்திரம்) பிரம்மோற்சவம், தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் கருட சேவை முக்கிய திருவிழாக்களாக அமைந்துள்ளன. வறுமை நீங்க, நல்ல தொழில் அமைய, இத்தல பெருமாள் அருள்பாலிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT